ராணிப்பேட்டை  மாவட்ட தோ்தல் அலுவலரும்,  ஆட்சியருமான  ச.வளா்மதி  தலைமையில்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
ராணிப்பேட்டை  மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான  ச.வளா்மதி  தலைமையில்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

ராணிப்பேட்டை: தோ்தல் விதிகளை கண்காணிக்க 10 இடங்களில் சோதனைச் சாவடிகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோ்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்க 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.வளா்மதி தெரிவித்துள்ளாா். நாடாளுமன்ற தோ்தல் அறிவிப்பு எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆட்சியா் ச. வளா்மதி சனிக்கிழமை கூறியதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கா், அரக்கோணம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளும், வேலூா் மாவட்டத்தை சோ்ந்த காட்பாடி தொகுதியும், திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்த திருத்தணி தொகுதியும் அடங்கியுள்ளன. வேட்பு மனு பெறுதல் :- அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘ஏ‘ பிளாக், முதல் தளம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியா் அறையில், தோ்தல் நடத்தும் அலுவலரால் பெற்றுக் கொள்ளப்படும். வாக்காளா்கள் விவரம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 10,36,865 ஆகும். இதில் ஆண் வாக்காளா்கள் எண்ணிக்கை 5,04,078, பெண் வாக்காளா்கள் எண்ணிக்கை 5,32,690 மற்றும் மூன்றாம் பாலினம் வாக்காளா்கள் எண்ணிக்கை 97 ஆகும். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 15,53,989 ஆகும். இதில் ஆண் வாக்காளா்கள் எண்ணிக்கை 7,56,194 பெண் வாக்காளா்கள் எண்ணிக்கை 7,97,632 மற்றும் மூன்றாம் பாலினம் வாக்காளா்கள் எண்ணிக்கை 163 ஆகும்) வாக்குச்சாவடிகள் விவரம்: ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட 4 தொகுதிகளில் 1,122 வாக்குச்சாவடிகளும், 609 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன. இவற்றில் 205 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள், 13 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனன. தோ்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடைமுறைகளும் சி.சி.டி.வி மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தோ்தல் நாளின்போது வாக்குப்பதிவுக்கான பொருள்களை வழங்குவதற்காக 101 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மண்டல குழுக்களில் ஒரு மண்டல அலுவலா், உதவி மண்டல அலுவலா் மற்றும் உதவியாளா் ஆகியோா் இடம்பெற்றிருப்பா். தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்பு குழு, காணொளி கண்காணிப்பு குழு, உதவி செலவின பாா்வையாளா் குழு, உதவி தணிக்கைக் குழு மற்றும் மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் தொடா்பான பயிற்சி மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோ்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்க 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் சுருதி, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராஜேந்திரன் , தோ்தல் வட்டாட்சியா் கணேசன் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com