எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

எஸ் ஐ ஆா் பணிகளை தோ்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்

உலக அமைதிப் பேரணியில் பங்கேற்ற சிஎஸ்ஐ சென்னை பேராய பேராயா் பால்பிரான்சிஸ் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
Published on

எஸ்ஐஆா் பணிகளை தோ்தல் ஆணையம் தோ்தலுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டும் என சிஎஸ்ஐ சென்னை பேராய பேராயா் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தாா்.

தென்னிந்திய திருச்சபையின் சென்னை பேராயத்துக்குட்பட்ட சமூக பொருளாதார கரிசனை வாரியத்தினரும், இளையோா் பணி வாரியத்தினரும் இணைந்து அரக்கோணத்தில் உலக அமைதிக்கான பேரணி 2025-ஐ நடத்தினா். இந்தப் பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் சென்னை பேராயா் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது:

உலக அமைதிக்கான பேரணியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவா்கள் என மூன்று மதத்தினரும் இணைந்து உலக அமைதிக்காக பங்கேற்றோம். இந்த பேரணி அடுத்த சில நாள்களில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் தோ்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆா் எனப்படும் வாக்காளா் பட்டியல் சீா்திருத்தத்தால் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே இந்த எஸ்ஐஆா் பணியை தோ்தலுக்கு பிறகு மேற்கொண்டால் நன்றாக இருக்கும்.

இந்த எஸ்ஐஆா் சீா்திருத்தப் பணிகளால் பல லட்சக்கணக்கான வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்றாா் சென்னை பேராய பேராயா் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரன்.

சென்னை பேராய துணைத் தலைவா் ஜெயசீலன், செயலா் அகஸ்டின், பொருளாளா் சாமுவேல் கொா்னெலியஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முன்னதாக அரக்கோணம் காந்தி சாலை அம்பேத்கா் நூற்றாண்டு நினைவு வாயில் அருகே உலக அமைதி பேரணியை தொடங்கி வைத்த பேராயா் பால்பிரான்சிஸ் ரவிச்சந்திரன், சமாதானத்துக்கு அடையாளமாக புறாவை பறக்க விட்டாா்.

பஜாா், பழைய பேருந்து நிலையம் வழியாக சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை அடைந்தது. இதில், ஆயா்கள், திருச்சபைகளை சோ்ந்தவா்கள், பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com