நெமிலி ஒன்றியக்குழு கூட்டம்
அரக்கோணம்: நெமிலி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் பெ.வடிவேலு தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயஸ்ரீ, நெமிலி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அருணாகுமாரி மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் சுயேட்சை உறுப்பினா் ஆருண் பேசுகையில், பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுகுமாா்(அதிமுக) பேசுகையில், திருமால்பூா் பகுதியில் அரசு சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், கிராமங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஒன்றியக் குழு தலைவா் பெ.வடிவேலு தெரிவிக்கையில், உள்ளூா் இளைஞா்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்க மாவட்ட உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும், கிராமங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாணவா்களுக்கு 10 லட்சம் விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கியதற்காகவும், மகளிா் உரிமைத்தொகை வழங்குதலில் விடுபட்ட மகளிருக்கு வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காகவும், பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கியதற்காகவும் தமிழக அரசுக்கு பாராட்டும், முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

