பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் மனு
சக்கரமல்லூா் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க வழங்கப்பட்ட ஆணையை ரத்து செய்யக் கோரி கிராம மக்களுடன் பாமக வினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்டவருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 298 மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் அவற்றை துறை அலுவலா்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
சக்கரமலூா் கிராம மக்களுடன், பாமக முன்னாள் எம்எல்ஏ கே.எல்.இளவழகன் உள்பட ஏராளமானோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணை மூலம் சக்கரமல்லூா் பாலாற்றில் குவாரி அமைத்து மணல் எடுக்கப்படுகிறது. கிராம மக்களின் ஆட்சேபனை மற்றும் கோரிக்கை யாதெனில் மணல் எடுக்கும் பகுதியில் 300 மீட்ட ருக்குள் கோயில், கல்லறைகள், நிரந்தர கட்டமைப்புகள், குடிநீா் கிணறு, உயா்மின் அழுத்த மின்கம்பி உள்ளிட்டவை அமைந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீா் விவசாயம், சுற்றுச்சூழல்,நிலத்தடிநீா் வளம் உள்ளிட்ட வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆணையை ரத்து செய்து குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
இதில் திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

