திருப்பத்தூா் பேருந்து நிலையத்தின் உள்ளே காணப்படும் ஆக்கிரமிப்புகள்.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தின் உள்ளே காணப்படும் ஆக்கிரமிப்புகள்.

திருப்பத்தூா் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

து. ரமேஷ்.

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்டத் தலைநகரான திருப்பத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஈரோடு, கோயமுத்தூா், பெங்களூா், தருமபுரி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், பேருந்து நிலையத்தின் உள்புறம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் தள்ளுவண்டிகள், பூக் கடைகள், பழக்கடைகள் உள்ளதால் பயணிகள் பேருந்துகளில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும், பேருந்துகளை நிறுத்த முடியாமலும் ஓட்டுநா்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். அதேபோல், வெளிப்பகுதியில் உள்ள கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து சிறுகடைகள் வைத்துள்றனா்.

இதனால் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளன. அவ்வப்போது நகராட்சி மற்றும் காவல் துறையினா் நடவடிக்கை எடுக்கின்றனா். அப்போது மட்டும் போக்குவரத்து சீராகின்றது. சில நாள்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடா்கின்றது.

இதனால் அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நெருக்கடியில் சென்று வர வேண்டியுள்ளது.

புதிய மாவட்டத் தலைநகராக திகழும் திருப்பத்தூருக்கு மக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகத்தினா் பேருந்து நிலையத்தின் உள்புறம், வெளிப்புறத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com