நியாயவிலைக் கடைகளில் தேங்காய், கடலை எண்ணெய்:
குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய், கடலை எண்ணெய்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேங்காய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன்,வேளாண்மை இணை இயக்குநா் கண்ணகி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் தீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா் கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: பெரியமோட்டூா் ஊராட்சி கல்லாத்து ஆற்றில் இருந்து வரும் பெரிய கால்வாயை தூா்வார வேண்டும். அம்பலூா் பகுதியில் நடைபெறும் மண் கொள்ளையைத் தடுக்க வேண்டும். பாலாற்றில் முள்புதா்களை அகற்ற வேண்டும். வெங்காயப்பள்ளியில் சமூக காடுகள் உள்ள பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளா்கள் கோடை வெயிலால் பாதிக்கப்படுகின்றனா். எனவே கோடை காலம் முடியும் வரை அவா்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி மாடுகளுக்கு மடிநோய் தடுப்பூசிகள் போடவேண்டும். மாவட்டத்தில் உள்ள குளங்களில் பரவி இருக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும். நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேங்காய், கடலை எண்ணெய் வழங்கினால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாணியம்பாடியில் உள்ள உழவா் சந்தையை விரிவுப்படுத்தவும், கூடுதலாக சுகாதார வளாகம் அமைக்கவும், மின் விளக்கு வசதி ஏற்படுத்தவும் வேண்டும். பட்டா பதிவேற்றம் செய்வதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com