கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்றவா் தவறி விழுந்து உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்க முயன்றவா் கயிறு அறுந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு பாணக்கார வட்டத்தைச் சோ்ந்தவா் பாலாஜி (44). எலக்ட்ரீஷியன். இவா் வளா்த்து வந்த ஆடு ஒன்று வீட்டருகே உள்ள 60 அடி ஆழம் 10 அடி உயரம் தண்ணீா் உள்ள கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்தது. இதைப்பாா்த்த பாலாஜி கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற கயிறு மூலம் கிணற்றில் இறங்கியுள்ளாா். அப்போது திடீரென கயிறு அறுந்ததில் கிணற்றில் விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த பாலாஜி கிணற்றிலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் பொதுமக்கள் உதவியுடன், கிணற்றில் இறந்துகிடந்த பாலாஜியின் சடலத்தை மீட்டு, நாட்டறம்பள்ளி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும் கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை உயிருடன் மீட்டனா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com