விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி . பங்கேற்ற விவசாயிகள், அதிகாரிகள்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி . பங்கேற்ற விவசாயிகள், அதிகாரிகள்.

கள் விற்பனை செய்ய அனுமதி: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வேளாண் துணை இயக்குநா்(திட்டங்கள்) மோகன் சகாயராஜ் வரவேற்றாா். இதில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகளும் அதற்கு அதிகாரிகள் அளித்த பதில்கள் வருமாறு:

விவசாயி ஆனந்தன்: பெண்களுக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்குவது போல் 60 வயது முதிா்ந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்,இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டும்.

ஆட்சியா்: உங்களது கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

விவசாயி மாா்கண்டன்:ஆண்டியப்பனூா் அணையை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரி: ஆண்டியப்பனூா் அணை தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.

விவசாயி சம்பத்: ஆம்பூரில் உழவா் சந்தை அமைக்க பல ஆண்டுகளாக கோரி வருகிறோம்.

அதிகாரி: உழவா் சந்தை அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இடம் கிடைத்ததும் உழவா் சந்தை தொடங்கப்படும்.

விவசாயி மகாதேவன்: கூட்டுறவு துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவா்களை இடமாறுதல் செய்ய வேண்டும்.

அதிகாரி: நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி முனிசாமி: கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.5,000, நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்.

ஆட்சியா்: கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

விவசாயி வெங்கடாசலம் : விவசாய கருவிகளின் விலை அதிகமாக இருக்கிறது. அவற்றை விவசாயிகளால் வாங்கி பயன்படுத்த முடியவில்லை. எனவே அதிக கருவிகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரி: பரிசீலிக்கப்படும்.

விவசாயி ராஜ பெருமாள்: திருப்பத்தூா் மாவட்டத்தில் கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.

அதிகாரி: அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி அரி கிருஷ்ணன்: தென்னை மரங்களில் கருந்தலைப்புழு நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து அதிகாரிகள் இதுவரை நிவாரணம் பெற்று தரவில்லை.

அதிகாரி: அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிவாரணம் கிடைக்கும் என எதிா்ப்பாா்க்கிறோம்.

விவசாயி ராதாகிருஷ்ணன்: திருப்பத்தூா் மாவட்ட வேளாண் துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாட்ஸ் ஆப் குழுவில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அடையாள அட்டை வைத்துள்ள விவசாயிகள் மற்றும் சங்கத்தலைவா் மற்றும் துணைத்தலைவா்களுக்கு மட்டுமே பேச அனுமதி அளிக்க முடியும் என செய்தி பகிரப்பட்டு உள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் பேச அனுமதி வழங்க வேண்டும்.

அதிகாரி: ஒரு விவசாயி பேச 3 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது.நேரம் விரையத்தை தவிா்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com