ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம்: புதிய பேரூராட்சிகள் தேவை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் வளர்ச்சி பெற்ற வணிக நகரமாகும். சென்னை}பெங்களூரு 6 வழி சாலை, சென்னை-பெங்களூரு - கோவை ரயில் மார்க்கம் அமைந்துள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

-எம்.அருண்குமார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் வளர்ச்சி பெற்ற வணிக நகரமாகும். சென்னை}பெங்களூரு 6 வழி சாலை, சென்னை-பெங்களூரு - கோவை ரயில் மார்க்கம் அமைந்துள்ளது.

ஆம்பூர் நகரைச் சுற்றி மாதனூர் ஒன்றியத்தின் பெரும்பாலான ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்கும், மாணவ, மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகள் செல்வதற்கும், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்யவும், தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஆகியோர் பணி நிமித்தமாகவும் தங்கள் சேவைப் பணிகளைப் பெறவும், அன்றாட தேவைகளுக்கும் ஆம்பூர் நகருக்கு வரவேண்டியுள்ளது.

ஆம்பூரில் உள்ள சேவைகள்... ஆம்பூரில் பல்வேறு காவல் நிலையங்கள், காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வணிக சந்தைகள், தீயணைப்பு நிலையம், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வனத் துறை அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு மருத்துவமனை, பத்திரப் பதிவு அலுவலகம், போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், 25}க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள், தொழிலாளர் நல அலுவலகம், தகவல் தொடர்பு அலுவலகங்கள் என அனைத்து வசதிகளும் ஆம்பூர் நகரிலேயே உள்ளன.

மாதனூர் ஒன்றியத்தின் பெரும்பாலான ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் ஆம்பூர் நகருக்கு தினமும் வந்து செல்கின்றனர். அதேபோல், பெரும்பாலான ஊராட்சிகளின் வங்கிக் கணக்குகள் ஆம்பூர் நகர வங்கிகளில்தான் உள்ளன. ஆனால், உள்ளாட்சித் துறை அலுவல்களுக்கு மட்டும்தான் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. வளர்ந்து வரும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு ஊராட்சி, ஒன்றிய பகுதிகளின் எல்லைகளை மறுசீரமைக்க வேண்டும்.

மாதனூர் செல்லும் நிலை... ஆம்பூர் நகரைச் சுற்றியுள்ள மாதனூர் ஒன்றியத்தில் சோலூர், ஆலாங்குப்பம், பெரியாங்குப்பம், நாய்க்கனேரி, நாச்சார்குப்பம், விண்ணமங்கலம், மின்னூர், செங்கிலிகுப்பம், கன்னடிகுப்பம், சோமலாபுரம், தேவலாபுரம், துத்திப்பட்டு, பெரிவரிகம், சின்னவரிகம், அயித்தம்பட்டு, சாத்தம்பாக்கம், சின்ன கொம்மேஸ்வரம், கைலாசகிரி, நரியம்பட்டு, மிட்டாளம், வெங்கடசமுத்திரம், கரும்பூர், பார்சனாப்பள்ளி, மோதகப்பள்ளி, கதவாளம், அரங்கல்துருகம், குமாரமங்கலம், வீராங்குப்பம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மேல்சாணாங்குப்பம், வடகரை, பாப்பனப்பல்லி, சின்னப்பள்ளிகுப்பம், வடசேரி, கொல்லகுப்பம் என 30}க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பல்வேறு திட்டங்களில் பயனடையும் பயனாளிகள், ஊராட்சி பகுதிகளுக்கு வசதிகள் வேண்டி மனு கொடுக்கச் செல்வோர் என பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் செல்ல மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கால நேரமும் விரையமாகிறது. பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி துறையில் பணிபுரியும் பெண்கள் அலுவலர் நிமித்தமாக மாதனூர் சென்றுவர சிரமப்படுகின்றனர்.

மறுசீரமைப்பு தேவை... மாதனூர் ஒன்றியத்தின் ஊராட்சிகளில் வசிப்போரும், வட்டார வளர்ச்சி அலுவலகப் பணியாளர்களும் பணி நிமித்தமாகப் பயணிப்போரும் ஆம்பூரை அன்றாடம் கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். புதிய மாநிலங்கள், மாவட்டங்கள், வருவாய் கோட்டங்கள், வருவாய் வட்டங்கள் பிரிக்கப்படுவதுபோல புதிய ஊராட்சி ஒன்றியம் பிரிக்கப்படுவது அவசியமாகிறது.

ஊராட்சி ஒன்றிய எல்லைகளை மறுசீரமைப்பு செய்து ஆம்பூரை மையமாக கொண்டு புதியதாக ஒரு ஒன்றியம் ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம், துத்திப்பட்டு, கைலாசகிரி ஆகிய பெரிய கிராம ஊராட்சிகளின் எல்லைகளை மறுசீரமைப்பு செய்து அருகில் உள்ள சிறு ஊராட்சிகளை அந்தந்த பெரிய கிராம ஊராட்சிகளுடன் இணைத்து பெரியாங்குப்பம், துத்திப்பட்டு, கைலாசகிரி பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மாதனூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சில புதிய பேரூராட்சிகளை உருவாக்கும் முடிவு ஏற்கெனவே அரசின் பரிசீலனையிலும் உள்ளதாகவும், அதற்கான கருத்துருக்கள் ஏற்கெனவே அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஆம்பூர் ஊராட்சி ஒன்றியம், பெரியாங்குப்பம், துத்திப்பட்டு மற்றும் கைலாசகிரி பேரூராட்சிகள் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.