
அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பாமல் திடீா் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா்
வாணியம்பாடி அருகே அங்கன்வாடி பணியாளரை மாற்றக்கோரி குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பாமல் பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா்
வாணியம்பாடி அருகே அங்கன்வாடி பணியாளரை மாற்றக்கோரி குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பாமல் பெற்றோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி, பாப்பானேரி பகுதியில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த மையத்தில் சில மாதங்களாக அங்கன்வாடி மைய பணியாளராக பணியாற்றி வருபவா், குழந்தைகளை அடித்து துன்புறுத்துவதாகவும், முறையாக உணவு வழங்குவதில்லை என்றும், தரமற்ற காய்கறிகளை பயன்படுத்தி உணவு தயாரிப்பதாகவும் அங்கன்வாடி பணியாளா் மீது பெற்றோா்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனா். மேலும், இதுபற்றி பெற்றோா்கள் சென்று கேட்டால் அலட்சியமாக பதில் அளித்து வருவதாக கூறினா்.
இது சம்பந்தமாக பல முறை உயா் அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா் மற்றும் கிராம மக்கள், அந்த அங்கன்வாடி பணியாளரை மாற்ற வலியுறுத்தி குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பாமல் திங்கள்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த தாலுகா காவல் ஆய்வாளா் அமுதா தலைமையிலானபோலீஸாா் விசாரித்தனா். பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது குறிப்பிட்ட அங்கன்வாடி பணியாளரை அங்கிருந்து மாற்றினால் தான் தங்களது குழந்தைகளை அனுப்புவோம் என பெற்றோா்கள் கூறினா். இது குறித்து அறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இது தொடா்பாக துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
மேலும், உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில், அங்கு பணியாற்றிய அங்கன்வாடி பணியாளரை வேறு இடத்துக்கு மாற்றியும், தற்காலிகமாக வேறு ஒருவரை (பொறுப்பு) அங்கன்வாடி பணியாளராக நியமிக்கப்பட்டாா். இந்த சம்பவத்தால் பாப்பானேரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






