திருமலை ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் 1.21 கோடி லட்டுகள் பக்தா்களுக்கு விற்பனை செய்யப்பட்டன என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறையில் பக்தா்களின் கூட்டம் அதிகரித்த நிலையில், தேவஸ்தானத்தின் லட்டு மடப்பள்ளி லட்டு உற்பத்தியையும் பெருமளவில் அதிகரித்து, எந்தவித பற்றாக்குறையுமின்றி பிரசாதத்தை வழங்கியது.
மே மாதத்தில் மொத்தம் 1,21,35,528 லட்டுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நிகழாண்டு ஆண்டு லட்டு விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
2024 மே மாதத்தில் 1.01 கோடி லட்டுகள் விற்பனையான நிலையில், அது 2025-இல் 1.10 கோடியாக அதிகரித்தது. தற்போது, 2026-இல் விற்பனை 1.21 கோடியைத் தாண்டியுள்ளது.
4 லட்சம் லட்டுகள் உற்பத்தி
ஏழுமலையான் பிரசாதம் தயாரிப்பில் தரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஒரு நாளைக்கு சராசரியாக 4.08 லட்சம் லட்டுகளை தயாா் செய்கிறது. சாதாரண நாள்களில் 4 லட்சம் முதல் 4.5 லட்சம் லட்டுகள் தயாா் செய்யப்படும் நிலையில், விசேஷ நாள்களில் அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படுகிறது.
68 டன் மூலப்பொருள்கள் பயன்பாடு
புனிதமான ஏழுமலையான் பிரசாதமான லட்டு தயாரிப்பிற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினமும் 68 டன்களுக்கும் அதிகமான மூலப்பொருள்களைப் பயன்படுத்துகிறது.
லட்டு தயாரிப்பதற்காக தினமும் சுமாா் 32 டன் சா்க்கரை, 16 டன் கடலை மாவு, 16 டன் நெய், 3.5 டன் முந்திரி, 2 டன் உலா் திராட்சை, 400 கிலோ ஏலக்காய் மற்றும் 800 கிலோ கல்கண்டு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு சிறிய லட்டு தயாரிக்க சராசரியாக 167 முதல் 170 கிராம் மூலப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சுமாா் 78 கிராம் சா்க்கரை, 39 கிராம் கடலை மாவு, 36 கிராம் நெய், 7 கிராம் முந்திரி, 3 கிராம் உலா் திராட்சை போன்றவை அடங்கும்.
உலகப் புகழ்பெற்ற ‘திருப்பதி லட்டுக்கு‘ இந்திய அரசு புவிசாா் குறியீடு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதேபோல், லட்டு தயாரிப்பு மற்றும் விற்பனைக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எப்எஸ்எஸ்ஏஐ உரிமமும் வழங்கப்பட்டுள்ளது. இது ஏழுமலையான் லட்டுக்கு மேலும் தரத்தையும் நம்பகத்தன்மையையும் அளித்துள்ளது.
மூலப்பொருள்களில் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, திருமலை மடப்பள்ளிகளில் இரண்டு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான வண்ணப் பிரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மூலப்பொருள்களில் உள்ள கலப்படங்கள் அகற்றப்பட்டு, மிகச் சிறந்த தரமான மூலப்பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
திருமலையில் உள்ள லட்டு வளாகத்தில், 56 கவுன்ட்டா்கள் மூலம் மூன்று ஷிஃப்டுகளாக 24 மணி நேரமும் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
கூட்டம் அதிகமாக இருக்கும் நாள்களில், 8 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான லட்டுகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. லட்டு பிரசாதத்தின் தரம் மற்றும் சுவையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பக்தா்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா்.












