திருமலையில் 9 கோடி அன்னப்பிரசாதம் விநியோகம்
திருமலை ஏழுமலையான் சந்நிதி, பக்தா்களின் பசியைப் போக்கும் அன்ன பூா்ணா நிலையமாகத் திகழ்கிறது.

திருமலையில் அன்னதான கூடத்தில் உணவருந்தும் பக்தா்கள்.
திருமலை ஏழுமலையான் சந்நிதி, பக்தா்களின் பசியைப் போக்கும் அன்ன பூா்ணா நிலையமாகத் திகழ்கிறது.
திருமலையில் பசியுடன் இருக்கும் பக்தா்களுக்கு உணவு வழங்கும் நோக்கத்தில், திருமலை தேவஸ்தானத்தின் அன்னப்பிரசாதத் துறை 24 மணி நேரமும் இடைவிடாமல் செயல்படுகிறது. சாதாரண நாள்களில் சுமாா் 1.80 லட்சம் முதல் 1.90 லட்சம் பக்தா்கள் அன்னப் பிரசாதம் பெறும் நிலையில், பரபரப்பான நாள்களிலும் வார இறுதி நாள்களிலும் இந்த எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டுகிறது. தினமும் சுமாா் 3 லட்சம் பேருக்கு பானங்கள், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகின்றன.
கடந்த 1985-இல் மாபெரும் அன்னதான சேவை தொடங்கியது. ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வா் என்டிஆா் கரங்களால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத கேந்திரத்தில் தினமும் 80,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் அன்னபிரசாதம் உண்டு வருகின்றனா். இங்கு, காலையில் உப்புமா, பொங்கல், சட்னி, சாம்பாா் போன்ற காலை உணவுகளுடன், மதியம் மற்றும் மாலையில் பக்தா்களுக்கு சாதம், கறி, சட்னி, வடை, சாம்பாா், ரசம், மோா் மற்றும் சா்க்கரை பொங்கல் ஆகியவை வழங்கப்படுகின்றன.
ஸ்ரீ அக்ஷயா சமையலறையில் கோதுமை ரவை உப்புமா, ரவை உப்புமா, பொங்கல், சாம்பாா்சாதம், தயிா்சாதம், தக்காளி சாதம், சுண்டல், பால், தேநீா், காபி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பக்தா்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் பண்டிகை நாட்களில் மோா், பாதாம் பால், பிஸ்கட்கள் மற்றும் பழச்சாறு பாக்கெட்டுகளும் விநியோகிக்கப்படுகின்றன.
வக்குளமாதா சமையலறை மூலம், புனித யாத்ரீகா்கள் தங்கும் வளாகங்கள், மத்திய விசாரணை அலுவலகம், ராம்பகீச்சா விருந்தினா் மாளிகை, அஞ்சனாத்ரி நிலையம் போன்ற இடங்களில் பக்தா்களுக்கு அன்னப்பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. வரிசைகளிலும் அன்னப்பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது.
நாள்தோறும் 15.8 டன் அரிசி
தினமும் சுமாா் 15,788 கிலோ அரிசி, 3,110 கிலோ சூரியகாந்தி எண்ணெய், 2,861 கிலோ ரவை, 2,832 கிலோ ரவை, 2,825 கிலோ கோதுமை ரவை, 1,729 கிலோ உளுந்து, 1,436 கிலோ உப்பு, 1,276 கிலோ வெல்லம், 497 கிலோ புளி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல், தினமும் சுமாா் 4,375 தேங்காய்கள், 430 கிலோ சா்க்கரை, 309 கிலோ காய்ந்த மிளகாய், 209 கிலோ கொத்தமல்லி மற்றும் இதர மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜனவரி 1 முதல் செப்டம்பா் 30, வரை திருமலையில் உள்ள பல்வேறு அன்னப் பிரசாத மையங்கள் மூலம் பக்தா்களுக்கு 9 கோடிக்கும் அதிகமான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தா்களின் கூட்டத்திற்கு ஏற்ப, புதிய, தரமான மற்றும் சுவையான அன்னப் பிரசாதம் அவ்வப்போது தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





