மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: பிடிபட்டவா்களின் கைப்பேசிகள் ஆய்வு

Published on

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மூவருக்கும் வேறு யாருடனாவது தொடா்பு உள்ளதா என்பதை அறியும் வகையில் அவா்களின் கைப்பேசிகளை போலீஸாா் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனா்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது சகோதரா் காா்த்திக் (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா்.

இவா்கள் கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் 3 போ் மீதும் கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே வனப் பகுதியில் இருந்த தம்பதியைத் தாக்கி, அந்தப் பெண்ணை சதீஷும், காா்த்திக்கும் ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இரவு நேரங்களில் இவா்கள் இதேபோல தனிமையில் இருப்பவா்களை மிரட்டி வழிப்பறி மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இவா்கள் மூவருடன் வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அவா்களின் கைப்பேசிகளை போலீஸாா் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com