கோவையில் அனுமதியின்றிச் செயல்படும் 120 பார்கள் மீது நடவடிக்கை தேவை: தமிழ்நாடு பார், ஹோட்டல், கிளப் உரிமையாளர் சங்கம்

கோவையில் அரசு அனுமதியின்றி 120 பார்கள் (மது அருந்தகம்) செயல்படுவதாகவும் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
Updated on
1 min read

கோவையில் அரசு அனுமதியின்றி 120 பார்கள் (மது அருந்தகம்) செயல்படுவதாகவும் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பார், ஹோட்டல், கிளப் உரிமையாளர்கள் சங்கம் (டான்பாக்) வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பென்ஸ் சரவணன்சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். கோவை மாவட்ட போர்டிங், லாட்ஜிங் சங்கத் தலைவர் செந்தில், செயலர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், நாடு முழுவதிலும் உணவகங்களுக்கான ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தாலும், நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் 28 சதவீத வரியே தொடருகிறது. இதை பாதியாகக் குறைக்க வேண்டும். அதேபோல, உள்ளீட்டு வரியை திரும்பப் பெறும் சலுகையை உணவகங்களுக்கு வழங்க வேண்டும்.
பார்கள் செயல்படும் நேரத்தை அதிகாலை 2 மணி வரை நீட்டிப்பதுடன், தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் பென்ஸ் சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதிலும் அனுமதியில்லாத ஏ.சி. பார்கள் ஏராளமாகச் செயல்பட்டு வருகின்றன. அனுமதி பெற்று செயல்படும் பார்களில் அடிக்கடி சோதனையிடும் அதிகாரிகள் அனுமதி பெறாத பார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதுபோன்று கோவையில் மட்டும் 120 பார்கள் செயல்படுகின்றன. மாநில வாரியாக அனுமதியில்லாத பார்கள் குறித்து நாங்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். இதையடுத்து அவற்றின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம். 
பார்களில் இருந்து 5 கி.மீ. தொலைவு வரையிலும் வாகன சோதனை நடத்தக் கூடாது என்று விதிகள் இருந்தாலும், பார்களுக்கு வெளியிலேயே காவல் துறையினர் சோதனை நடத்தி, மது அருந்துபவர்களைப் பிடித்து அபராதம் விதிக்கின்றனர். இதனால், அனுமதி பெற்று பார்களை நடத்தும் உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு வாடிக்கையாளர்கள் வரத் தயங்குவதால் நஷ்டம் ஏற்படுகிறது. 
பார், ஹோட்டல், கிளப் உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசுக்கு விளக்கும் விதமாக சென்னையில் டிசம்பர் 27-ஆம் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com