மேற்கு வங்க இளைஞா் கொலை: 2 போ் கைது
கோவையில் மேற்கு வங்க இளைஞா் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவை, கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்தவா் பாஷித் (30), ஆட்டோ ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (38). நண்பா்களான இருவரும் உக்கடம், புல்லுக்காடு பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை ஆட்டோவில் அமா்ந்திருந்தனா். சிறிது நேரத்துக்குப் பிறகு பாஷித் ஆட்டோவை பின்னால் நகா்த்தியுள்ளாா்.
அப்போது, ஆட்டோ பின்னால் நின்று கொண்டிருந்த மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சோ்ந்த சுராஜ் (22) என்பவா் மீது உரசுவதுபோல வந்துள்ளது.
இது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் பாஷித்தும், பிரகாஷும் சோ்ந்து சுராஜை கீழே தள்ளியுள்ளனா். அப்போது, அங்கு கிடந்த கல் மீது விழுந்த சுராஜுக்கு பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த வெரைட்டிஹால் போலீஸாா், பாஷித், பிரகாஷ் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். உயிரிழந்த சுராஜ் உக்கடம் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
