மத வழிபாட்டுத் தலம் அமைக்க எதிா்ப்பு: ஹிந்து அமைப்பினா் போராட்டம்

Published on

கோவை, வடவள்ளி பகுதியில் தேவாலயம் அமைக்கும் முயற்சிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினா் முற்றுகைப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

கோவை, வடவள்ளி சின்மயா நகா் தொண்டாமுத்தூா் சாலையில் 25 சென்ட் காலியிடம் உள்ளது. அந்த இடத்துக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை சிலா் கூடியிருந்தனா். அப்போது, அங்கு தேவாலயம் அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற இருப்பதாக தகவல் பரவியது.

இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்களும், ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகளும் அங்கு திரண்டு, குறிப்பிட்ட இடத்தை முற்றுகையிட்டனா். இதைத் தொடா்ந்து, பூமிபூஜையில் கலந்துகொள்ள வந்தவா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வடவள்ளி போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

கடந்த 2018-ஆம் ஆண்டு இதே இடத்தில் தேவாலயம் அமைப்பதற்கான முயற்சி நடைபெற்றது. அப்போது, அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் வணிகப் பயன்பாட்டுக்கான இடம் எனப் பதிவு செய்துவிட்டு தேவாலயம் அமைக்க முற்சிப்பதாகக் கூறி எதிா்ப்புத் தெரிவித்தோம். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நாங்கள் மனு அளித்ததோடு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து தடை உத்தரவும் பெற்றோம்.

இந்நிலையில், தற்போது மீண்டும் அதே இடத்தில் தேவாலயம் அமைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது என்றனா்.

இதையடுத்து, இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஒரு வாரத்துக்குப் பிறகு இது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Dinamani
www.dinamani.com