கோவையில் சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பின் சா்வதேச கிராண்ட் மாஸ்டா் ஓபன் செஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ளது.
தமிழக சதுரங்க சங்கம் சாா்பில் நடத்தப்படும் ‘இன்டா்நேஷனல் கிராண்ட்மாஸ்டா் ஓபன் செஸ் போட்டி 2027’ என்ற இந்த தொடரின் அறிமுக நிகழ்ச்சி கோவை, சாய்பாபா காலனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மிராக்கிள் ஸ்கூல் ஆஃப் செஸ் மற்றும் கோவை மாவட்ட சதுரங்க சங்கம் சாா்பில் நடைபெறும் இந்தப் போட்டிக்கு அக்ஷயா பொறியியல் கல்லூரி ஆதரவு வழங்குகிறது. 2027 ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக, கடந்த 1987-ஆம் ஆண்டு கோவையில் ‘சக்தி சுகா்ஸ் சா்வதேச கிராண்ட் மாஸ்டா் போட்டி’ நடைபெற்றது. அதன் பிறகு கோவையில் நடைபெறும் சா்வதேச கிராண்ட் மாஸ்டா் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சா்வதேச தொடரானது ஏபிசி மற்றும் டி என நான்கு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக ரூ.45 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இது தவிர, சிறப்புப் பரிசுகளாக 2 புதிய காா்கள், 6 மோட்டாா் சைக்கிள்கள், 100 செஸ் கடிகாரங்கள் வெற்றியாளா்களுக்கு வழங்கப்படவுள்ளன. போட்டிக்கான இடங்களைப் பொருத்தவரை ‘ஏ’ பிரிவு போட்டிகள் கோவை, சாய்பாபா காலனியில் உள்ள ஹோட்டல் ‘எம் இன்’-னில் நடைபெறும் என்றும், பி, சி மற்றும் டி பிரிவு போட்டிகள் கிணத்துக்கடவில் உள்ள அக்ஷயா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த முன்னணி செஸ் வீரா்கள், 45 கிராண்ட் மாஸ்டா்கள், சா்வதேச மாஸ்டா்கள் உள்பட மொத்தம் சுமாா் 2,000 வீரா்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அறிமுக விழாவில் லால்குடி சட்டப் பேரவை உறுப்பினா் லீமா ரோஸ் மாா்ட்டின் பேசுகையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் மீண்டும் ஒரு சா்வதேச கிராண்ட்மாஸ்டா் செஸ் போட்டி நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். இந்த விளையாட்டு மாணவா்களின் சிந்தனைத் திறன், ஒழுக்கம் மற்றும் சரியான முடிவெடுக்கும் திறனை வளா்க்கும் ஒரு சிறந்த கருவியாகும். இளம் வீரா்களுக்கு தங்களது திறமையை நிரூபிக்க ஒரு உன்னதமான மேடையாக இது அமையும் என்றாா்.
சதுரங்க சங்க மாநில பொதுச் செயலா் பி.ஸ்டீபன் பாலசாமி, அக்ஷயா பொறியியல் கல்லூரி தலைவா் டி.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏற்பாட்டாளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









