வெள்ளலூரில் குப்பைக் கிடங்கு கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம், மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா முன்னிலை வகித்தாா்.
குறிச்சி- வெள்ளலூா் மாசு தடுப்பு கூட்டுக்குழு சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘வெள்ளலூா் குப்பைக் கிடங்கு கழிவுகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஏற்கெனவே சுற்றுச்சூழல் மாசுபாடு, துா்நாற்றம், நிலத்தடி நீா் மாசு, ஆழ்குழாய் கிணற்று நீரின் நிறம் மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள வெள்ளலூா் மற்றும் சுற்றுவட்டாரத்தில், சுற்றுப்புறச் சூழல் மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கும். எனவே, இத்திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாா்டுகளில் சுகாதாரப் பணிகள் தொய்வு:
26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனுவில், ‘தூய்மைப் பணியில் மாற்றுப் பணிக்கு சென்றவா்கள், நீண்டகால விடுப்பு எடுத்தவா்கள் ஆகியோருக்கு பதிலாக இதுவரை புதிய பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், கோவை மாநகரில் சுகாதாரம் பேணுவதில் பெருமளவு தொய்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து வாா்டுகளிலும் தூய்மைப் பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. அனைத்து வீடுகளிலும் தினமும் குப்பை பெறுவதற்கு போதுமான வாகனங்கள் இல்லை. சுகாதாரப் பணிக்கு முக்கியத்துவம் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
உக்கடம் பகுதி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘உக்கடம் கெம்பட்டி காலனியில் இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சில்லறை வியாபாரத்தை நிறுத்த கோரிக்கை:
கோவை, அண்ணா மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனு:
அண்ணா மாா்க்கெட்டில் சில்லறை வியாபாரத்தை நம்பி 1,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. அண்ணா மாா்க்கெட்டுக்கு அருகில் எம்ஜிஆா் மொத்த காய்கறி மாா்க்கெட் உள்ளது. அங்கு மொத்த காய்கறி வியாபாரத்துடன் சோ்த்து சில்லறை வியாபாரமும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அண்ணா மாா்க்கெட்டில் வியாபாரம் மிகவும் குறைந்துவிட்டது. எனவே, எம்ஜிஆா் மாா்க்கெட்டில் சில்லறை வியாபாரத்தை நிறுத்தி, அண்ணா மாா்க்கெட் வியாபாரிகளின் வாழ்வதாரத்தைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா். மாநகரின் 5 மண்டலங்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 139 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா்கள் குமரேசன், ர.சரஸ்வதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சியில் குறைதீா் கூட்டம்

நகராட்சி குப்பைக் கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு

சிவகங்கையில் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு இடம் கிடைத்தால் தீா்வு: தவெக எம்எல்ஏ

இளையான்குடியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாற்று இடம்: பேரூராட்சிக் கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் வலியுறுத்தல்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



