கோடை விடுமுறைக்குப் பின் கோவையில் வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடநூல்கள், எழுது பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஒரேநாளில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
முன்னதாக, மாணவா்கள் வசதிக்காக பள்ளி வளாகம், வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டிருந்தன. குடிநீா், சுகாதாரம் தொடா்பான மராமத்துப் பணிகளும் செய்து முடிக்கப்பட்டிருந்தன. தனியாா் பள்ளி வாகனங்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவ,மாணவிகளுக்கு வழங்குவதற்காக பாடநூல்கள், நோட்டுகள், எழுது பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் ஏற்கெனவே தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்ததும் அவா்களுக்கு அனைத்துப் பொருள்களும் வழங்கப்பட்டன.
முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை வரவேற்பதற்காக அரசு, தனியாா் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் செயல்படும் 83 தொடக்கப் பள்ளிகள், 37 நடுநிலை, 11 உயா்நிலை, 17 மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பூக்கள், இனிப்புகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கி வரவேற்கப்பட்டது. சில பள்ளிகளில் மேளதாளம் முழங்கவும், மாலை அணிவித்தும் ஆசிரியா்கள் வரவேற்றனா்.
பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு முதல் நாளிலேயே காலை உணவு வழங்கும் திட்டத்தின்கீழ் சுவையான உணவு பரிமாறப்பட்டது. கோவை மாநகராட்சியின் புதிய ஆணையா் கட்டா ரவி தேஜா, ஆா்.எஸ்.புரத்தில் மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் இடத்தை நேரில் பாா்வையிட்டு உணவின் தரம், சுவை, விநியோகம் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும் 70- ஆவது வாா்டு தேவாங்கபேட்டை சாலை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு வழங்கப்படுவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நடப்பு கல்வியாண்டில் (2026-2027) 1 முதல் 3 -ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளுக்கு மாநில கல்விக் கொள்கையின்படி வடிவமைக்கப்பட்ட புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாடநூல், பயிற்சிப் புத்தகத்துடன் இணைந்து ஒரே பாடப் புத்தகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மனப்பாட முறையைத் தவிா்க்கும் வகையிலும், வாழ்வியல் திறன்களை அறிந்து கொள்வதற்கான பாடங்களுடனும் எளிமையாகக் கற்கும் வகையிலும் இந்த பாடநூல் வடிவமைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியா்கள் தெரிவித்துள்ளனா்.



தொடர்புடையது

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: மாணவா்கள் உற்சாகம்

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு

கோடைவிடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறப்பு

தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



