உணவகங்களில் விதிமீறல்: 3 மாதங்களில் ரூ.7.39 லட்சம் அபராதம் வசூல்

அபராதம் - சித்திரிப்பு
உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் கடந்த செப்டம்பா் முதல் தற்போது வரையிலான 3 மாத காலத்தில் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில், விதிகளை மீறிய உணவகங்களுக்கு ரூ.7.39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், உணவு நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் 3 மாத கால சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செப்டம்பா், அக்டோபா், நவம்பா் ஆகிய மாதங்களை உள்ளடக்கிய இந்தக் காலகட்டத்தில், மாவட்டம் முழுவதும் மொத்தம் 6,426 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது, சுகாதாரமற்ற முறையில் உணவகங்களை நடத்தியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, 155 உணவகங்களுக்கு சமரச அபராதமாக மொத்தம் ரூ.7 லட்சத்து 39 ஆயிரம் விதிக்கப்பட்டது. இதில், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 104 உணவகங்களுக்கு ரூ.3 லட்சத்து 74 ஆயிரமும், உரிமம் இன்றி செயல்பட்ட 23 கடைகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரமும், தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களைப் பயன்படுத்திய 28 கடைகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும், விதிமீறல்களில் ஈடுபட்ட 52 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணையும் (நோட்டீஸ்), குறைபாடுகளை சரிசெய்யக் கோரி 74 நிறுவனங்களுக்கு மேம்பாட்டு குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளன. தர பரிசோதனைக்காக 168 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றில் 11 உணவு மாதிரிகள் தரமற்றவை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதைத்தொடா்ந்து, விதிகளை மீறிய 23 கடைகளில் உணவுப் பொருள்களை விற்பனை செய்யத் தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

