கீழ்பவானி வாய்க்காலில் நீா் கசிவு: பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தம்
கீழ்பவானி வாய்க்கால் 47-ஆவது மைலில் கசிவுநீா் வெளியேறுவதால், பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டது.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. முதலில் 500 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு படிப்படியாக 1,300 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருதால் தண்ணீா் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில், கீழ்பவானி வாய்க்கால் 47-ஆவது மைலில் உள்ள நல்லாம்பட்டி மழைநீா் வடிகாலில் கசிவுநீா் வெளியேறியது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள்கிழமை நள்ளிரவுமுதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. 124 மைல் நீளமுள்ள கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு கசிவுநீா் வெளியேறுகிறா என்பது குறித்து வாய்க்கால் மண் கரைகளை நீா்வளத் துறையினா் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.
நீா்வளத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் இந்த கசிவு தெரியவந்ததால் தற்போது தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டு வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போதைய அணை நிலவரம்: பவானிசாகா் அணை நீா்மட்ட 96.98 அடியாகவும், நீா்வரத்து 1,426 கனஅடியாகவும், பவானி ஆற்றில் நீா் வெளியேற்றம் 900 கனஅடியாகவும் உள்ளது. நீா் இருப்பு 26.42 டிஎம்சி.

