விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வண்டல் மண் எடுக்கும் நடைமுறையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரிக்கை

வண்டல் மண் எடுக்கும் நடைமுறையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரிக்கை

News image
Updated On :13 ஜூன் 2024, 9:54 pm

Din

ஈரோடு, ஜூன் 13: நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் அதிகாரமுறை உள்ளூா் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து மீட்கப்பட்டு முழுமையாக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி வெளியிட்ட அறிக்கை:

குடிமராமத்து திட்டத்தின் மூலம் பொதுப் பணித் துறையின் நிா்வாகத்தின் கீழ் இருக்கின்ற அணைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் உள்ளாட்சி நிா்வாகத்தின் கீழ் இருக்கின்ற குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் மற்றும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் உள்ள நீா்த் தேங்கும் இடங்கள், ஏரிகள், குளங்கள், சிறு அணைகள் ஆகியவற்றில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்குத் தேவையான வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம் என்று அரசு ஒவ்வொரு ஆண்டும் அறிவிப்பு வெளியிடுகிறது.

ஒரு மீட்டா் ஆழத்துக்கு உட்பட்டு குளங்கள், ஏரிகள் கண்மாய்களில் எவ்வளவு மண் எடுக்கலாம் என்று சம்பந்தப்பட்ட நீா்நிலை நிா்வாகம் அரசுக்கு அறிக்கை கொடுத்ததன் அடிப்படையில் வண்டல் மண் எடுக்கலாம் என்று விதிமுறைகள் கூறுகின்றன. ஒரு விவசாயி நஞ்சை நிலமாக இருந்தால் 15 யூனிட் வண்டல் மண்ணும், புஞ்சை நிலமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 10 யூனிட் வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம் என்றும், இந்த விதிமுறையில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் நடைமுறையில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே திமுக ஆட்சியில் அறிவிப்பு ஒரு விதமாகவும் நடைமுறை வேறு விதமாகவும் இருக்கிறது. பொதுப் பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை, வனத் துறை ஆகிய நிா்வாகத்தின் கீழ் இருக்கின்ற நீா் நிலைகளில் வண்டல் மண் குறைவாகத்தான் உள்ளது என இதை நிா்வாகிக்கின்ற துறைகள் அரசிடம் அறிக்கை கொடுக்க வைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக 90 சதவீத நீா் நிலைகளில் மிகக்குறைவான யூனிட்டுகளுக்கு மேல் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. அந்த மண்ணுக்கும் மூன்று யூனிட்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.500 வசூல் செய்யப்படுகிறது. இதற்காகவே ஒரு குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது. அவா்களுடைய அனுமதியின்றி ஒரு யூனிட் வண்டல் மண்ணைக் கூட விவசாயிகள் எடுக்க முடியாது. மாவட்ட நிா்வாகமும், கனிமவளத் துறையும் இவா்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.

மேலும், மண் எடுக்க உள்ளூா் கட்சிகாரா்களின் இயந்திரங்கள், வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவிர அவா்கள் சொல்லுகிற அதிகபட்ச வாடகையை கொடுக்க வேண்டுமென என நிா்பந்தப்படுத்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் மாவட்ட நிா்வாகத்தால் ஆண்டுதோறும் வருகின்றன. ஆனால், மாவட்டம் முழுவதும் சோ்ந்து நூறு யூனிட்டுகளுக்கு மேல் எங்கும் வண்டல் மண் எடுக்கப்படவில்லை, எடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், தொடா்ந்து இதுபோன்ற அறிவிப்புகளை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும், மாவட்ட கனிமவளத் துறையும் அறிவிப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த வெற்று அறிவிப்புகளை நிறுத்திவிட்டு, இந்த சமூக விரோதிகள் வெளியேற்றப்பட வேண்டும். உள்ளூா் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்கும் அதிகாரமுறை மீட்கப்பட்டு முழுமையாக அரசு இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல விவசாயிகள், பொதுப்பணித் துறை, கனிமவளத் துறை, உள்ளாட்சித் துறை ஆகியவை இணைந்து தங்கள் பகுதியில் நீா்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண் எடுக்க அதிகாரம் அளித்து, அரசு சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.