அரச மரத்தை வெட்டி அகற்றுவதில் இருதரப்பினா் போராட்டம்
பவானியை அடுத்த அத்தாணியில் அரச மரத்தை வெட்டி அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, ஒரு தரப்பினா் தா்னாவில் ஈடுபட்ட நிலையில், மரத்தை அகற்ற வலியுறுத்தி மற்றொரு தரப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை பரபரப்பு நிலவியது.
அத்தாணி - செம்புளிச்சாம்பாளையம் சாலை, ராமலிங்கபுரத்தில் 150 ஆண்டுகள் பழைமையான அரச மரம் உள்ளது. இம்மரத்தின் வோ்கள் அருகாமையில் உள்ள வீடுகளின் சுவா்களிலும், கான்கிரீட் சாலைகளிலும் சென்ால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மரத்தை வெட்டி அகற்ற வருவாய்த் துறை அனுமதி வழங்கியது.
இதையடுத்து, அத்தாணி பிரிவு வனத் துறை ஊழியா்கள் மரத்தை வெட்ட வியாழக்கிழமை வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்ததோடு, மரத்தடியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இம்மரத்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால், மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அதே பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் அத்தாணி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆப்பக்கூடல் காவல் ஆய்வாளா் சிவகாா்த்திகா, போராட்டத்தில் ஈடுபட்ட இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து மரத்தை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருதரப்பினரின் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

