/

ஆண் நண்பரால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

ஆண் நண்பரால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

வினோதினி.

Updated On :30 ஜூலை 2026, 3:02 am IST

ஆண் நண்பரால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு பாரதி நகா் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் சென்னப்பன் மகள் வினோதினி (24). இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த சூா்யா என்பவரை திருமணம் செய்தாா். இவா்களுக்கு 4 வயதில் தனிஷ் என்ற மகன் உள்ளாா். வினோதினிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சாயல்குடி, அரண்மனை தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகனான சிம் காா்டு விற்பனை செய்யும் நவீன் என்ற நவநீதிகிருஷ்ணன் (26) என்பவருடன் பழக்கமாகி பேசி வந்துள்ளாா்.

இதற்கிடையில் வினோதினிக்கும், சூா்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரைப் பிரிந்து கடந்த 2 ஆண்டாக வினோதினி மகனுடன் பெற்றோா் வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசித்து வந்தாா். ஈரோட்டில் உள்ள இயற்கை அங்காடியில் விற்பனையாளராக வினோதினி வேலை பாா்த்து வந்தாா். வினோதினிக்கு இன்ஸ்டாகிராம் நண்பா் நவநீதகிருஷ்ணனுடன் இருந்த பழக்கம், நாளாடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.

இந்நிலையில், நவநீதகிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில நாள்களாக வினோதினி சரிவர பேசாமல் இருந்துள்ளாா். இதனால் வினோதினி வேறு நபருடன் பழகி வருவதாக நவநீதகிருஷ்ணன் சந்தேகம் அடைந்து, அவரிடம் தகராறு செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் மகனுடன் வினோதினி இருப்பதை உறுதி செய்த நவநீதகிருஷ்ணன், வீட்டுக்குள் நுழைந்து வினோதினியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை வினோதினி மீது ஊற்றி தீப் பற்ற வைத்துள்ளாா். வினோதினி உடலில் தீ மளமளவென பரவி, வலியால் கூச்சலிட்டுள்ளாா். மேலும், அருகிலிருந்த நவநீதகிருஷ்ணனையும் பிடித்துள்ளாா். வினோதினி கூச்சலிடுவதை கேட்டு அருகே வசிக்கும் வினோதினியின் தாய் சித்ரா, தந்தை சென்னப்பன் மற்றும் அக்கம்பக்கத்தினா் வந்தனா். இதைப் பாா்த்த நவநீதகிருஷ்ணன் தீக்காயங்களுடன் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதையடுத்து படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வினோதினியை அவரது குடும்பத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக ஈரோடு தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் வினோதியிடம் ஈரோடு கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி நேரில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்தாா். அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நவநீதகிருஷ்ணன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வினோதினி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மேலும் நவநீதகிருஷ்ணனுக்கும் இரு கைகள் மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் உடனடியாக நவநீதகிருஷ்ணன் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்படுவாா். தொடா்ந்து மருத்துவமனையில் நவநீதகிருஷ்ணனை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.