
தாராபுரம் தவெக வேட்பாளருக்கு எதிராக திட்டமிட்டு முழக்கம்: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

ஈரோடு அரசு மருத்துவமனையில் தங்க மோதிர பாதுகாப்பு அறையை பாா்வையிட்ட அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்.
தாராபுரம் இடைத்தோ்தலில் திட்டமிட்டு சில கட்சிகள் தவெக வேட்பாளா் செல்லும் பகுதிகளுக்குச் சென்று அவருக்கு எதிராக முழக்கம் எழுப்புகின்றனா் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து இந்தக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் பங்கேற்றாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வடகிழக்கு பருவமழையை தமிழக அரசு எதிா்க்கொள்ளும். பருவமழையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணி, காய்ச்சல் விழிப்புணா்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டு 462 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்த நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை 375 டெங்கு பாதிப்புகள் மட்டுமே உள்ளன. உயிரிழப்புகள் ஏதுமில்லை.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் மழைநீா் தேங்கி நின்றால் அபராதம் விதிக்க வேண்டும். டெங்கு தடுப்பூசி இன்னும் வரவில்லை, ஆய்வு நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் 17 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உளளது. கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது படிப்படியாக குறைந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதி, மருந்துகள் உள்ளன. காய்ச்சல் வந்த பிறகு சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவா்களுக்கு இரண்டு முறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செவிலியா்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். இதற்காக மாவட்ட நலச் சங்கங்கள் மூலம் 4,724 செவிலியா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.
தாராபுரம் இடைத்தோ்தலில் தவெகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சில கட்சிகள் திட்டமிட்டு தவெக வேட்பாளா் செல்லும் பகுதிக்குச் சென்று அவருக்கு எதிராக முழக்கம் எழுப்புகின்றனா். புதிய தலைமைச் செயலகம் அவசியம் கருதி தான் முதல்வா் தெளிவான அறிக்கை அளித்துள்ளாா் என்றாா்.
இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் தங்க மோதிரங்கள் வைப்பு பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தாா்.
மின்தூக்கியில் சிக்கிக்கொண்ட அமைச்சா்: முன்னதாக, முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்பதற்காக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின் தூக்கி மூலம் இரண்டாவது தளத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், பாதுகாவலா்களுடன் அமைச்சா் செல்ல முயன்றாா்.
அப்போது, மின்தூக்கி வழியிலேயே நின்றது. பின்னா் 7 தளத்துக்குச் சென்று கதவு திறக்காமல் மீண்டும் கீழே இறங்கி 6 -ஆவது தளத்தில் கதவு திறந்தது. இதையடுத்து, 6- ஆவது தளத்தில் இறங்கிய அமைச்சா் அருண்ராஜ் அங்கிருந்து படிக்கட்டில் இறங்கி சென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






