உதகை ரேடியோ வானியல் மையத்தில் தேசிய அறிவியல் தினம் அனுசரிப்பு
உதகையில் உள்ள ரேடியோ வானியல் மையத்தில் தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்பட்டது.


உதகையில் உள்ள ரேடியோ வானியல் மையத்தில் தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்பட்டது.
ராமன் விளைவு கண்டுபிடிப்புக்காக சர் சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட தினமான பிப்ரவரி 28-ஆம் தேதியை நினைவுகூறும் வகையிலும், சர் சி.வி. ராமனை கௌரவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகள் உதகை அருகே உள்ள முத்தொரை கிராமத்தில் அமைந்துள்ள ரேடியோ வானியல் மையத்தில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இம்மையத்தில்தான் உலகில் உள்ள மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கிகளில் ஒன்றான ஊட்டி ரேடியோ தொலை நோக்கி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த ரேடியோ தொலைநோக்கி பல முக்கிய வானியல் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், பொதுமக்களிடையே அறிவியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதகை ரேடியோ வானியல் மையம் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியை புதன்கிழமை நடத்தியது.
இந்நிகழ்ச்சியையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவியல் கட்டுரை எழுதுதல், விநாடி-வினா, விஞ்ஞான நிகழ்வுகளை வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மாவட்டத்தில் உள்ள 80 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவ, மாணவியர் பங்கேற்றிருந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் புதன்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
அதேபோல, பல்வேறு பள்ளிகள், கல்வி நிறுவனங்களின் சார்பில் புதன்கிழமையன்றும் அறிவியல் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து, ஊட்டி ரேடியோ வானியல் தொலைநோக்கியைக் கொண்டு நட்சத்திர ஆய்வு நடத்தப்பட்டதோடு, ஊட்டி ரேடியோ தொலைநோக்கியின் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் அமைப்புகளின் விளக்கமும், தற்போதைய முன்னணி வானியற்பியல் ஆராய்ச்சி குறித்த விளக்கங்களும் அளிக்கப்பட்டன. அத்துடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களின் காட்சிக்கூடங்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மணவியரின் வெற்றி பெற்ற விஞ்ஞான மாதிரிகளும் இடம்பெற்றிருந்தன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பரிசுகளை வழங்கினார்.
ரேடியோ வானியல் மையத்தின் தலைவர் பேராசிரியர் மனோகரன் வானியல் ஆராய்ச்சிகள் தொடர்பாக சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருடன் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...