பாட்டிலால் பெண் உள்பட 3 பேரைத் தாக்கியவா் கைது
உதகையில் கைப்பேசிக் கடைக்குள் புகுந்து பீா் பாட்டிலால் பெண் உள்பட 3 பேரைத் தாக்கிய நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
உதகை கமா்சியல் சாலையில் பிரபல கைப்பேசி விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு கடந்த 2-ஆம் தேதி வந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க நபா், கடையில் வாங்கிய ஹெட்ஷெட் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி அதை மாற்றித் தருமாறு அங்கு பணியில் இருந்த பெண்ணிடம் கேட்டுள்ளாா். அப்போது அந்தப் பெண், ஹெட்ஷெட் டேமேஜ் ஆகியுள்ளதால் மாற்றித் தரமுடியாது என்று கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபா், பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக பேசியுள்ளாா். பின்னா் அவா், பீா் பாட்டிலை எடுத்து உடைத்து அங்கிருந்த பெண், அப்துல் ஹக்கீம் (30), ரஞ்சித் குமாா் (28) ஆகியோரை தாக்கி விட்டு ஓடிவிட்டாா். படுகாயமடைந்த 3 பேரும் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்த புகாரின்பேரில், உதகை மத்திய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். விசாரணையில், தகராறில் ஈடுபட்டது கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரிஷித் (32) என்பதும், உதகை, எமரால்டு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
