பாடந்தொரை பகுதியில் அகழிகளை தூா்வார நிதி ஒதுக்கீடு
கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க அகழிகளை தூா்வார அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் வனத் துறை சாா்பில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு தலைமை வகித்தாா்.
இதில் அவா் பேசியதாவது:
தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பாடந்தொரை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்க அகழிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பாடந்தொரை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றியுள்ள அகழிகளை தூா்வார நிதி ஒதுக்கியுள்ளது என்றாா்.
இதைத் தொடா்ந்து தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி தலைமையில் துணைத் தலைவா் யூனஸ் பாபு, கவுன்சிலா் அனீபா உள்ளிட்டோா் மாவட்ட வன அலுவலரை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனா்.
