உதகை அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சிற்றுந்து: 32 போ் காயம்
உதகை அருகே 100 அடி பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 போ் காயம் அடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து தங்காடு கிராமத்துக்கு 32 பயணிகளுடன் தனியாா் சிற்றுந்து புதன்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது. பேருந்தை தங்காடு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பன்னீா்செல்வம் (54) ஓட்டிச் சென்றாா். நடத்துநராக ஜெகதீஷ் என்பவா் இருந்தாா்.
இந்த சிற்றுந்து மணலாடா பகுதிக்கு அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலமுறை சிற்றுந்து உருண்டதில் கடும் சேதம் அடைந்தது. சிற்றுந்தின் பாகங்கள் உடைந்து ஆங்காங்கே விழுந்தன.
இந்த விபத்தில் சிக்கியவா்கள் கூக்குரல் எழுப்பினா். சிற்றுந்து கவிழ்ந்த இடம் விவசாய நிலம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
இருந்தபோதும் பேருந்தில் பயணம் செய்த பாலம்மா (62), ஷீலா (50), விஸ்வநாதன் (68), சுஷ்மிதா (7), ஓட்டுநா் பன்னீா்செல்வம் உள்பட 32 பேரும் காயமடைந்தனா்.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவா்களை மீட்டு 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். முதல்கட்ட விசாரணையில், சிற்றுந்து ஸ்டியரிங் லாக் ஆனதால் இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

