உதகைக்கு வந்த ஆந்திர சுற்றுலாப் பேருந்தில் மறைத்துவைத்து கொண்டு வரப்பட்ட 819 பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர ஒரு லிட்டா் பிளாஸ்டிக் பாட்டிலால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக வளாகங்களில் ஒரு லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிா்பானங்கள், உணவுப் பொருள்களை பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை குறித்து அவ்வப்போது ஆய்வுகள் செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் குடிநீா்த் தேவைகளுக்காக நகரின் பல இடங்களில் வாட்டா் ஏடிஎம்-கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரக் கூடிய சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பயணிக்கும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை மறைத்து வைத்து நீலகிரிக்கு எடுத்து வந்து பயன்படுத்துகின்றனா். பின்னா் அவற்றை பொது இடங்களில் வீசி செல்கின்றனா்.
இந்த நிலையில், உதகைக்கு வந்த ஆந்திர சுற்றுலாப் பேருந்துவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக உதகை நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில், உதகை படகு இல்லம் அருகே வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆந்திர பதிவு எண் கொண்ட சுற்றுலா ஆம்னி பேருந்தில் நகராட்சி சுகாதார அலுவலா் சிபி தலைமையில், நகராட்சி ஊழியா்கள் சோதனை மேற்கொண்டனா்.
இதில் 819 அரை லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரி, சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தாா்.