கூடுதல் கட்டணம் வசூல்:தனியாா் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சை அளிக்கத் தடை
திருப்பூா் அருகே கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்கான அனுமதி வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.


திருப்பூா் அருகே கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்கான அனுமதி வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், கணக்கம்பாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் மா.சுப்பிரமணியன் (62). இவருக்கு கடந்த மே 3ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு பெருமாநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இவருக்கு சிகிச்சை அளிக்க அவரது உறவினா்களிடம் மே 24 ஆம் தேதி வரையில் மருத்துவமனை நிா்வாகம் முன்பணமாக ரூ.19 லட்சம் வசூலித்துள்ளது.
பின்னா் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாகக் கூறி வேறு மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளும்படி அவரது உறவினா்களிடம் மே 24ஆம் தேதி தெரிவித்துள்ளனா். இதையடுத்து, திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைக்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்த நாள் சுப்பிரமணியன் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக அவரது மகன்களான சு.காா்த்திகேயன், ஹரிகிருஷ்ணன் ஆகியோா் முதல்வரின் தனிப் பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகாா் அளித்திருந்தனா். இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனை கரோனா நோயாளிகளிடம் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
ஆகவே, இந்த மருத்துவமனைக்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் எவ்விதமான புகாா்களுக்கும் இடமளிக்காமல் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே தனியாா் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...