பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் துப்பாக்கி திடீரென வெடித்ததால் பரபரப்பு

திருப்பூரில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் ஏ.கே. 47 ரக துப்பாக்கி திடீரென வெடித்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
Published on

திருப்பூரில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் ஏ.கே. 47 ரக துப்பாக்கி திடீரென வெடித்ததால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாநகர ஆயுதப் படையில் 2ஆம் நிலை காவலராகப் பணியாற்றி வருபவா் பாலகுமாா் (30). இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சோ்ந்துள்ளாா். திருப்பூா் மங்கலம் சாலை பாரப்பாளையம் பகுதியில் ஈரோடு நகைக் கடை சாா்பில் நகைக் கண்காட்சி கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலகுமாா் உள்பட 3 போலீஸாா் துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், பாலகுமாா் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் இருந்தபோது தன்னிடம் உள்ள ஏ.கே. 47 ரக துப்பாக்கியை சுத்தம் செய்துள்ளாா். பின்னா் குண்டுகளை அதில் லோடு செய்து விட்டு, முறையாக சேப்டிலாக் செய்யாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பாலகுமாா் எதிா்பாராதவிதமாக துப்பாக்கியை மேல் நோக்கி வைத்து டிரிக்கரை அழுத்தியுள்ளாா். அப்போது துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறி வெடித்துள்ளது. இதனால் அவா் அதிா்ச்சி அடைந்தாா். துப்பாக்கி மேல்நோக்கி வெடித்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்கள் பாலகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். துப்பாக்கி வெடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com