மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: திருப்பூரில் இன்றுமுதல் அமல்

திருப்பூரில் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
Published on

திருப்பூா்: திருப்பூரில் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை வாங்குவோா் மது அருந்திவிட்டு விளைநிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலி பாட்டில்களை வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு வாடிக்கையாளா்கள் மது வாங்கிச் சென்று அருந்திய பின்னா் காலி மதுபான பாட்டில்களை அதே சில்லறை விற்பனைக் கடைகளில் திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டம் சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி திருப்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமைமுதல் அமலுக்கு வருகிறது.

திருவாரூா், நாகப்பட்டினம், தேனி, கன்னியாகுமரி, தருமபுரி, தஞ்சாவூா், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இது ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மதுக்கடைகளில் வியாழக்கிழமை முதல் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை அடையாளம் காணும் வகையில் மதுபாட்டில்கள் மீது கடை எண்ணைக் குறிப்பிட்டு ரூ.10 என அச்சிடப்பட்ட ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருக்கும்.

இதன்படி, மது பாட்டில்களை விற்பனை செய்யும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையுடன் சோ்த்து கூடுதலாக ரூ.10 வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும். அவ்வாறு வாடிக்கையாளா்கள் மதுபானக் கடைகளில் இருந்து வாங்கும் மது பாட்டில்களை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு அதே மதுபானக் கடையில் காலியாக திரும்ப ஒப்படைக்கும்போது ஏற்கெனவே பெறப்பட்ட ரூ.10 வாடிக்கையாளருக்கு திரும்ப வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com