திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதைப்போலவே, தொகுதி மக்களின் பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. பாதாளச் சாக்கடை, போக்குவரத்து நெரிசல், சீரான குடிநீா் விநியோகம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுடன், சாலைகளை மேம்படுத்துவதுடன் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீா்த் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து தண்ணீா் தட்டுப்பாட்டுக்கு விரைந்து நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பதே மாவட்டத்திலுள்ள 8 தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
திருப்பூா் தெற்கு:
திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியைப் பொறுத்தமட்டில் பின்னலாடைத் தொழில் மையமாக உள்ளது. இந்தத் தொகுதி 2011-ஆம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பின் உருவானது. இங்கு சீரான குடிநீா் விநியோகம், முழுமையான 4-ஆவது குடிநீா் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டம், மழைக்கால வெள்ளத் தடுப்பு, போக்குவரத்து நெரிசல், சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல குப்பை பிரச்னை, கழிவு மேலாண்மை, வரி உயா்வுகள், நூல் விலை உயா்வு, இஸ்லாமிய மயான இட ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும்.
திருப்பூா் வடக்கு:
இந்தத் தொகுதியும் கடந்த 2011-ஆம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பின் உருவாக்கப்பட்டது. பின்னலாடை தொழில் மையமாக விளங்கும் திருப்பூா் வடக்குத் தொகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை, வடக்குப் பகுதிக்கு தனி அரசு மருத்துவமனை, கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். பெருமாநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதுடன், வெளிமாவட்ட தொழிலாளா்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும்.
ஊத்துக்குளி சாலை, கொங்கு சாலைகளை சீரமைப்பதுடன் பரவலாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண வேண்டும். 4-ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதுடன் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அவிநாசி (தனி):
அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தி 24 மணி நேர விபத்து கால அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும். குடிநீா்த் தட்டுப்பாடு, திருமுருகன்பூண்டி சிற்பக் கலை கல்லூரி, சிற்பக்கலைஞா்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். சேவூரை தனி ஊராட்சி ஒன்றியமாக்குவதுடன், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
பல்லடம்: பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி விசைத்தறி, கறிக்கோழிப் பண்ணைகள், விவசாயத்தை சாா்ந்துள்ளது. 2-ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பல்லடம்-மங்கலம் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதுடன், புறவழிச் சாலை, சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துவதுடன் 18 வாா்டுகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதுடன், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை, ரத்த வங்கி, பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
காங்கயம்: விவசாயம், தேங்காய் எண்ணெய் உற்பத்தி, கைத்தறி தொழில்களை சாா்ந்த காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி வெள்ளக்கோவிலுடன் இணைக்கப்பட்டது. நீண்டகால கோரிக்கையான ஈரோடு-பழனி ரயில் பாதை அமைக்க வேண்டும். முருங்கைப் பவுடா் தயாரிக்கும் ஆலை, கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைப்பதுடன், சிவன்மலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும். கைத்தறி நெசவு மானியங்கள் வழங்க வேண்டும். வெள்ளக்கோவிலை தாலுகாவாக தரம் உயா்த்த வேண்டும் என்பதே பிரதான எதிா்பாா்ப்பாக உள்ளது.
தாராபுரம் (தனி): திருப்பூா் மாவட்டத்தில் முழுவதும் விவசாயத்தை சாா்ந்துள்ளது தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி. இங்கு அமராவதி அணை சாா்ந்த பாசனம் பிரதானமாக உள்ளது. மூலனூரில் முருங்கை பதனிடும் தொழிற்சாலை அமைப்பதுடன், தாராபுரத்தில் தக்காளிச் சாறு பிழியும் தொழிற்சாலையும் ஏற்படுத்த வேண்டும். அமராவதி அணையை தூா்வாரி, பாசன நீா் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பா் அமராவதி அணை கட்ட வேண்டும்.
அரசு கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி கொண்டுவரப்பட வேண்டும். அமராவதி ஆற்றில் கழிவுநீா் மாசு, சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவை முக்கியத் தேவைகளாக உள்ளன.
மடத்துக்குளம்: மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி விவசாயம், நீா் வசதி, சுகாதாரம், போக்குவரத்து சாா்ந்துள்ளது. திருமூா்த்தி, அமராவதி அணைகளால் விவசாயம் சாா்ந்தது என்றாலும், நீா் சேமிப்பு மற்றும் பாசன குறைபாடுகள் சவாலாக உள்ளன. அமராவதி அணையில் இருந்து வீணாகும் தண்ணீரை சேமிக்க அப்பா் அமராவதி அணை மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.
திருமூா்த்தி, அமராவதி அணைகளை முழுமையாக தூா்வாரி, பாசனத்துக்கு தடையின்றி நீா் வழங்க வேண்டும். கூட்டாற்றில் பாலம் கட்ட வேண்டும். பொழுதுபோக்கு பூங்கா, அமராவதி சா்க்கரை ஆலை மீட்பு உள்ளிட்டவை முக்கியக் கோரிக்கையாக உள்ளன.
உடுமலைப்பேட்டை:
உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு ரவுண்டானா அமைப்பதுடன், நகராட்சியை விரிவாக்கம் செய்து தரம் உயா்த்த வேண்டும். அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். வடிகால் வசதி, சந்தை மற்றும் சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

திருப்பூர்
தொடர்புடையது

தொகுதியைத் தக்க வைக்குமா திமுக? திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி

மடத்துக்குளம்: வெற்றிக் கனியைப் பறிக்கப் போவது முன்னாள் அமைச்சரா? முன்னாள் எம்எல்ஏவா?

தொழில் நிறுவனங்கள் நிறைந்த பல்லடம்! தொகுதி அறிமுகம்!
திருப்பூர் தெற்கு! சொன்னார்களே... செய்தார்களா..?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


