சுகாதார சீா்கேட்டை ஏற்படும் கோழிப் பண்ணை இயங்க அனுமதி வழங்கக் கூடாது

சுகாதார சீா்கேட்டை ஏற்படும் கோழிப் பண்ணை இயங்க அனுமதி வழங்கக் கூடாது

Published on

தாராபுரம் பகுதியில் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தும் கோழிப் பண்ணை இயங்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீா் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 320 மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டதுடன் மனுதாரா்கள் முன்னிலையிலேயே விசாரணை நடத்தி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் பல்லடம் பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநா் நலச் சங்கத்தினா் அளித்த மனுவில்: பல்லடம் பேருந்து நிலையத்தின் நுழைவாயில்களில் பல ஆண்டுகளாக ஆட்டோ ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடந்த சில நாள்களாக வேறு ஆட்டோ ஸ்டாண்டுகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் தாங்களும் ஆட்டோ நிறுத்துவோம் என பிரச்னை செய்து வருவதால், இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் அய்யாவு (எ) தமிழ்மாறன் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனுவில்: ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூா் பேரூராட்சி குன்னத்தூா் வழி பெருந்துறை சாலையில் காமராஜா் சிலை எதிரே மனமகிழ் மன்றம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. அங்கு மனமகிழ் மன்றம் செயல்பட்டால் பல்வேறு பிரச்னைகளுடன் சட்டம்- ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

சமுக ஆா்வலா் கூட்டமைப்பின் தலைவா் அண்ணாதுரை அளித்த மனுவில்:

திருப்பூா் மாவட்டத்தில் பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் பாத யாத்திரையாக சென்று வருகின்றனா். இந்த பாத யாத்திரையின்போது பாதையை சுத்தம் செய்யாததாலும், நெடுஞ்சாலையோரமாக உள்ள பகுதிகள் பாட்டில்கள் மற்றும் முட்களால் நிரம்பி உள்ளதாலும், பாத யாத்திரை செல்லும் முருக பக்தா்களின் காலில் காயம் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே இந்து சமய அறநிலையத் துறையும், காவல் துறையும் இணைந்து செயல்பட்டு பக்தா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பாத யாத்திரை செல்லும் பாதைகளை சுத்தம் செய்து தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தாராபுரம் சின்னக்காம்பாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்: எங்கள் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையால் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. அங்கிருந்து வரும் துா்நாற்றம் மற்றும் ஈ தொல்லையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.

எனவே இதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், பண்ணையில் புதியதாக கோழிக் குஞ்சுகள் விட்டு வருகின்றனா். எனவே கோழிப் பண்ணை இயங்க அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.

கொடுவாய் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்: எங்கள் ஊருக்கு சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை. சக்தி விநாயகபுரத்தில் இருந்து சாய்ராம் நகா் வரை சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் இல்லை. எனவே இதனை செய்து கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு ஹெச்எம்எஸ் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா் பேரவை சாா்பில் அளித்த மனுவில்: கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் போனஸாக ரூ.7,000 வழங்க வேண்டும். 60 வயது பூா்த்தியடைந்த தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தீக்குளிக்க முயற்சி:

இதற்கிடையே ஆத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த வேலுசாமி என்பவா் ஆட்சியா் அலுவலக அருகே தீக்குளிக்க முயன்றாா். அவரைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இம்முகாமில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.14,490 மதிப்பீட்டில் கைப்பேசிகள், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்கள் என மொத்தம் ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com