முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

காவிரி ஆற்றில் நீா்வரத்து 1.35 லட்சம் கன அடியாக உயா்வு: ஒகேனக்கல் அருவிகள் நீரில் மூழ்கின

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், ஒகேனக்கல்லில் உள்ள அனைத்து அருவிகளை மூழ்கடித்துச் செல்லும் காவிரி.
Updated On :27 ஜூலை 2024, 6:52 pm

Din

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து அருவிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

கா்நாடகம், கேரள மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பியுள்ளன. இவ்விரு அணைகளுக்கும் வரும் நீா்வரத்தின் அளவைப் பொருத்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இரு அணைகளில் இருந்தும் திறக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை தமிழகம் வந்தடைந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக நீா்வரத்து அதிகரித்து ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக நீா்வரத்து இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 1.10 லட்சம் கன அடியாகவும், மாலை 1.35 லட்சம் கன அடியாகவும் அதிகரித்தது. காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல்லில் உள்ள அனைத்து அருவிகள், நடைபாதை உள்ளிட்டவை நீரில் மூழ்கின.

கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீா் சூழத் தொடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகள், கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வருவாய்த் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா். அத்துடன் தாழ்வான பகுதிகளில் வசிப்போா் தங்குவதற்காக தற்காலிகமாக ஒகேனக்கல், ஊட்டமலை பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளி, மூன்று தனியாா் திருமண மண்டபங்களில் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை 13-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.