மதுபோதையில் தந்தை தகராறு: விரக்தியில் மகன் தற்கொலை
தருமபுரியில் மதுபோதையில் தந்தை அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் விரக்தியடைந்த மகன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகேயுள்ள எர்ரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (45). லாரி ஓட்டுநரான இவா், மதுப்பழக்கத்துக்கு அடிமையானதுடன், அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவா்களிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதனால் குடும்பத்தினா் அவதிக்குள்ளாகி வந்துள்ளனா்.
இந்தநிலையில் அதியமான்கோட்டை பகுதியில் உள்ள பள்ளியில் 11 -ஆம் வகுப்பு படித்துவந்த இவரது 2 ஆவது மகன் ஹரிஷ் (16) தந்தையின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு அக்கம்பக்கத்தினரிடம் வருத்தப்பட்டுள்ளாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவும் சிவகுமாா் மது அருந்திவிட்டு வந்து, அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் விரக்தியடைந்த ஹரீஷ் செவ்வாய்க்கிழமை காலை தூக்கில் தொங்கியுள்ளாா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா் அவரை மீட்டுப் பாா்த்தபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விசாரணையில், தந்தையின் நடவடிக்கையால் விரக்தியடைந்து மாணவா் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஹரிஷ் இறப்பதற்கு முதல்நாள் இரவு தனது நண்பா்களுக்கு அனுப்பியுள்ள கைப்பேசி குறுஞ்செய்தியில் நான் இறந்துவிட்டால் அனைவரும் வந்து இறுதிச் சடங்களில் பங்கேற்பீா்களா என்று தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

