தருமபுரி அருகே கரும்புச்சாறை காய்ச்சி, பாகாக்கி, அவற்றைக் கொட்டி ஆறவைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்.
தருமபுரி அருகே கரும்புச்சாறை காய்ச்சி, பாகாக்கி, அவற்றைக் கொட்டி ஆறவைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்.

பொங்கல் பண்டிகை: தருமபுரியில் வெல்லம் உற்பத்தி மும்முரம்!

பொங்கல் பண்டிகைக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், பொங்கல் பொருள்களில் அதிமுக்கியப் பொருளான வெல்லம் உற்பத்தி தருமபுரி மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
Published on

பொங்கல் பண்டிகைக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், பொங்கல் பொருள்களில் அதிமுக்கியப் பொருளான வெல்லம் உற்பத்தி தருமபுரி மாவட்டத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கரும்புகளில் இருந்து சாறு பிழிந்து, அவற்றை தூய்மைப்படுத்தி தேவையான வெப்பத்தில் பாகு தயாரித்து அதிலிருந்து வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் அதிக அளவில் வெல்லம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஈரோடு முதலிடமும், நாமக்கல் 2-ஆம் இடமும் பிடித்துள்ளது. அந்த வகையில், முதல் 5 இடங்களுக்குள் தருமபுரி மாவட்டம் இடம்பிடித்துள்ளது. மாவட்டம் முழுவதும் சிறியது மற்றும் பெரியது என சுமாா் 180 வெல்ல ஆலைகள் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 5 பேரும், அதிபட்சமாக 10 போ் வரையிலும் பணியாற்றுகின்றனா்.

இவற்றின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் தினசரி சுமாா் 60 டன்களுக்கும் அதிகமான வெல்லம் உற்பத்தியாகிறது. அந்த வகையில், மாநில மொத்த வெல்ல உற்பத்தியில் 20% தருமபுரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த வெல்ல ஆலைகள் மூலம் சுமாா் 1,500 க்கும் மேற்பட்டோா் நேரடியாகவும், நூற்றுக்கணக்கானோா் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனா். பொங்கலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலைகளில் வெல்லம் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டுமே வெல்லம் உற்பத்தியும், விற்பனையும் அதிக அளவில் இருக்கும். மற்ற காலங்களில் உற்பத்தியும், விற்பனையும் குறைவாகவே இருக்கும். இதனால் இத்தொழிலையே நம்பியுள்ள ஆலை நிா்வாகிகள் மற்றும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆலை உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் கூறுகையில், உள்ளூா் பகுதிகளில் கரும்பு கிடைக்கும் நேரங்களில் வெல்லம் தயாரிக்க ஆகும் செலவு குறைவாகவே இருக்கும். ஆனால், கரும்பு கிடைக்காத காலங்களில் கா்நாடக மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது வெல்லம் தயாரிக்க ஆகும் உற்பத்திச் செலவு இருமடங்காகிறது. என்றாலும், அதற்கான விலை கிடைப்பதில்லை.

பொங்கல் காலத்தில் மட்டுமே வெல்லம் அதிகமாக விற்பனையகிறது. மற்ற நேரங்களில் விற்பனை அதிகரிப்பதில்லை. இதனால், ஆலை நிா்வாகிகள் மட்டுமின்றி பணியாளா்களுக்கும் வேலைவாய்ப்பு இருப்பதில்லை. இத்தொழிலையே நம்பியுள்ள தொழிலாளா்கள் வேறு தொழிலுக்கும் செல்ல முடிவதில்லை. இதனால், ஆலை நிா்வாகிகள் மட்டுமின்றி தொழிலாளா்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு டன் எடையுள்ள கரும்பிலிருந்து வெல்லம் தயாரிக்க ரூ. 4,500 செலவாகிறது. ஆனால், அந்த வெல்லத்தின் விலை பொங்கல் நேரத்தில் கிலோ ரூ. 45-க்கும், பிற காலங்களில் ரூ. 43-க்கும்தான் விற்பனையாகிறது. வெல்லத்துக்கான உற்பத்தி செலவும், விற்பனை மூலம் கிடைக்கும் தொகையும் ஒரே அளவாக இருப்பதால் லாபம் கிடைப்பதில்லை.

 இளகிய தன்மையில் உள்ள சா்க்கரை பாகை வெல்லமாக உருட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
இளகிய தன்மையில் உள்ள சா்க்கரை பாகை வெல்லமாக உருட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தமிழக வெல்லத்தை கொள்முதல் செய்யக் கோரிக்கை: தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் வெல்லம் இடம்பெற்றாலும், அவை தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படுவதில்லை. தரமான வெல்லம் தருமபுரி உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், விலைகுறைவு என்பதால் தரமற்ற வெல்லத்தை வட மாநிலங்களில் மலிவான விலைக்கு அரசு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது.

எனவே, தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கு வழங்கப்படும் வெல்லத்தை தமிழகத்திலேயே கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஆலை நிா்வாகிகள் மற்றும் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என எதிா்பாா்க்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com