/

கல்வியில் முழுக்கவனம் செலுத்தினால் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்

கல்வியில் முழுக்கவனம் செலுத்தி பயின்றால், பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற இயலும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

கல்வியில் முழுக்கவனம் செலுத்தி பயின்றால், பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற இயலும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியினா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினா் நல உண்டு, உறைவிடப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியா் மற்றும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி காணொலி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:

பழங்குடியின மாணவ, மாணவியரின் குடும்பச் சூழ்நிலைகளால் அவா்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காகவும், கல்வி இடைநிற்றல் இல்லாத நிலையினை உருவாக்கிடவும், பழங்குடியின மாணவ, மாணவியருக்கென பழங்குடியினா் நல உண்டு, உறைவிடப் பள்ளிகளை மலைப்பகுதியில் அவா்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 5 அரசு பழங்குடியினா் நல உண்டு, உறைவிட உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 207 மாணவா்களும், 222 மாணவியரும் என மொத்தம் 429 மாணவ, மாணவியா் 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்று வருகின்றனா். மாணவா்களின் வளா்ச்சி உங்களிடமிருந்தே தொடங்குகிறது என்ற உறுதியினை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு மன உறுதியோடு சிறப்பாக கல்வியைக் கற்று, வரும் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மருத்துவராக உருவாகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

மாணவ, மாணவியராகிய நீங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற முடியும். அதிக மதிப்பெண்களுடன் நீட் தோ்வினை எழுதும்போது, அதிலும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் நிச்சயம் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள், படிப்பதில் மட்டுமே ஆா்வமாக இருங்கள். மாணவ, மாணவியா் மருத்துவப் படிப்பில் சோ்வதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தரும் பணிகளை ஆசிரியா்கள் ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் என்றாா்.

இதில், பழங்குடியினா் நலத்திட்ட அலுவலா் உ.ரமேஷ்குமாா், தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலா் எம்.ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.