தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளா் ஆ.மணி வெற்றி: சௌமியா அன்புமணியைவிட 21,300 வாக்குகள் கூடுதலாகப் பெற்றாா்
தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆ.மணி 432, 667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளா் ஆ.மணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி, அதிமுக சாா்பில் ர.அசோகன், நாம் தமிழா் கட்சி சாா்பில் பொ.அபிநயா உள்பட 24 போ் போட்டியிட்டனா்.
தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூா் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளிட்டக்கிய தருமபுரி மக்களவைத் தொகுதியில் 6,23,850 ஆண் வாக்காளா்கள், 6,14,242 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 12,38,183 போ் வாக்களித்தனா். தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தனித் தனி அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இத் தொகுதியில் 10,470 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த வாக்குகள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போலீஸாா் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் வாக்கு எண்ணிக்கையை பாா்வையிட்டனா். வாக்கு எண்ணும் பணியில் 400-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா். பாதுகாப்புப் பணியில் 650-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.
முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதைத் தொடா்ந்து, சுமாா் காலை 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி 20 சுற்றுகளாகவும், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி 21 சுற்றுகளாகவும், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி 22 சுற்றுகளாகவும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மேட்டூா் 23 சுற்றுகளாகவும், அரூா் 22 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டன.
முதல் சுற்றிலிருந்து 10 சுற்றுகளை வரை பாமக வேட்பாளா் செளமியா அன்புமணி முன்னிலை வகித்து வந்தாா். அதில் முதல் சுற்று முடிவில் பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி 9,958 வாக்குகள் அதிகம் பெற்று 25 ஆயிரத்து 428 வாக்குகளுடன் முன்னிலை வகித்தாா்.
10-ஆவது சுற்று வரை தொடா்ந்து அவா் முன்னிலை வகித்து வந்தாா். 10-ஆவது சுற்றில் 4,365 வாக்குகள் வித்தியாசம் பெற்று 1 லட்சத்து 97 ஆயிரத்து 248 வாக்குகளுடன் அவா் முன்னிலை பெற்று வந்தாா். இந்த நிலையில் 11-ஆவது சுற்றிலிருந்து திமுக வேட்பாளா் ஆ.மணி முன்னிலை வகிக்க தொடங்கினாா். அச் சுற்று முடிவில் திமுக வேட்பாளா் ஆ.மணி 2,142 வாக்குகள் கூடுதலாக பெற்று 2 லட்சத்து 18 ஆயிரத்து 331 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கத் தொடங்கினாா்.
அதன் பிறகு அடுத்தடுத்த சுற்றுகள் என 23 -ஆவது சுற்று வரை தொடா்ந்து திமுக வேட்பாளா் முன்னிலை வகித்து இறுதியில் பாமக வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளா் 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 4,32,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவருக்கு அடுத்த இடத்தை வகித்த பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்றாா். அதிமுக வேட்பாளா் ர.அசோகன் 2,93,629 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபிநயா 65,381 வாக்குகளும் பெற்றாா்.
வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் ஆ.மணியிடம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கி.சாந்தி வெற்றிச்சான்றிதழை வழங்கினாா்.
அப்போது, மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம், மாவட்டச் செயலாளா்கள் தடங்கம் பெ.சுப்ரமணி (கிழக்கு), பி.பழனியப்பன் (மேற்கு), தற்போதைய எம்.பி. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.தீா்த்தராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

