தோ்தலுக்காக இடஒதுக்கீடு அரசியலில் ஈடுபடுகிறது பாமக: அமைச்சா் ரகுபதி குற்றச்சாட்டு
தோ்தலுக்காக இடஒதுக்கீடு அரசியலில் ஈடுபடுகிறது பாமக:அமைச்சா் ரகுபதி குற்றச்சாட்டு


சென்னை, ஜூன் 26: தோ்தல் நேர ஆதாயத்துக்காக வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தை பாமக கையில் எடுப்பதாக சட்டத் துறை அமைச்சா் ரகுபதி தெரிவித்தாா்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றறப்பட்டது. அதனை முன்மொழிந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா். இதுதொடா்பாக கருத்து தெரிவித்த பாமக தலைவா் அன்புமணி, பிகாா் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வா் பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக விமா்சித்தாா்.
இந்நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில், அமைச்சா் ரகுபதி வெளியிட்ட அறிக்கை:
பிகாா் மாநிலத்தில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தோ, அதனை பாட்னா உயா் நீதிமன்றம் தடை செய்தது என்றோ முதல்வா் அவையில் பேசவில்லை. அதுதொடா்பான உரை பேரவை குறிப்பேடுகளில் உள்ளது.
எனவே, தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பொதுவெளியில் பரப்ப வேண்டாம் எனஅன்புமணியைக் கேட்டு கொள்கிறேன். சட்டப்படியாகவும், நீதிமன்றங்களிலும் நிலைக்கக்கூடிய வகையிலும் கணக்கெடுப்பு இருக்க வேண்டும் என்றால் அது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன் கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அண்மையில் பிகாா் அரசால் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களை பாட்னா உயா்நீதிமன்றறம் தள்ளுபடி செய்ததற்கு உரிய சமூக, கல்வி, பொருளாதாரம் குறித்த தரவுகள் இன்றி மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் ஒதுக்கீடு வழங்கியதும் முக்கியக் காரணமாகும்.
அரசியல் காரணங்களுக்காகவும், தமிழகத்தில் பொதுத் தோ்தல், இடைத்தோ்தல் நடைபெறும் காலங்களிலும் மட்டும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து பேசி பாட்டாளி மக்கள் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது என்றுதான் நாம் கருத வேண்டியுள்ளது. அனைத்து மக்களுக்கும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, வன்னியா் சமுதாயத்தினருக்கு பயனுள்ளதாக அமைய சரியான வழிமுறைகளைப் பின்பற்றி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...