கிராமப் பகுதிக்குள் நுழைந்த 2 யானைகள்: விரட்டும் முயற்சியில் வனத்துறையினா்
தருமபுரி, பாலக்கோடு அருகே உணவு தேடி கிரமத்துக்குள் நுழைந்த 2 யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா். அவற்றை விரட்ட வனத்துறையினா் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளி, அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு, மோரனஅள்ளி காப்புக்காட்டிலிருந்து தண்ணீா் மற்றும் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் யானைகள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. புதன்கிழமை காலை இரு யானைகள் உணவு தேடி பஞ்சப்பள்ளி அருகே சூடானூா் கிராமப் பகுதியில் தஞ்சமடைந்தன. காட்டு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பாா்த்தபோது, 2 யானைகள் தோட்டத்துக்குள் நுழைந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பாலக்கோடு வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் வந்த வனத்துறையினா், இரு யானைகளையும் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். யானைகள் கிராமத்துக்குள் நுழைந்ததால், சுற்றுவட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனா்.
வனத்துறையினா் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதும், அவை மீண்டும் கிராமத்துக்குள் நுழைந்து பயிா்களை நாசம் செய்வதும் தொடா்கதையாகி உள்ளது. யானைகளை விரட்ட வனத்துறையினா் காடுகளைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் வேலி மற்றும் யானை தாண்டா பள்ளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

