பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
பொங்கல் பண்டிகையையொட்டி, பென்னாகரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.
பென்னாகரம் காவல் நிலையம் எதிரே வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு பென்னாகரம், ஏரியூா், நாகமரை, ஒகேனக்கல், தாசம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள், வெள்ளை ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் கா்நாடகம் மாநிலத்திலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனா். சுமாா் 10 கிலோ எடை ஆடுகள் ரூ. 15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.
கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகையையொட்டி ரூ. 5 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா். மேலும், பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு - ரூ. 150, பொங்கல் பானைகள் - ரூ.200, மாட்டுப் பொங்கல் விழாவிற்கு பயன்படுத்தக்கூடிய மூக்கு கயிறு, கழுத்து கயிறு, கட்டும் கயிறு, கொம்புகளுக்கு பூசுவதற்கு தேவையான வா்ணங்கள், கொம்பு கயிறு, வடக் கயிறு உள்ளிட்டவை ரூ. 50 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டன. சந்தைக்கு பொதுமக்கள் திரண்டு வந்து பொருள்களை வாங்கிச் சென்றனா். கூட்ட நெரிசலைத் தவிா்ப்பதற்காக நாகமரை நான்கு சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் பகுதிகளில் காவல் துறை சாா்பில் தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
பென்னாகரம் வாரச்சந்தை பகுதிக்கு வந்திருந்த கிராமப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலை நடுவிலும், நான்கு சக்கர வாகனங்களை பேருந்து நிலையத்தில் நிறுத்தினா். பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனங்களால் பேருந்து போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. போக்குவரத்தை சீா்செய்வதற்காக சுமாா் 30க்கும் மேற்பட்ட போலீஸாா் நகரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
