காவேரிப்பட்டணம் அருகே பழைமையான ஊா்த் தலைவனின் நடுகல் கண்டுபிடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஊா்த் தலைவனின் நடுகல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
காவேரிப்பட்டணம் அருகே குடிமேனஅள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான ஊா் தலைவனின் நடுகல்.
காவேரிப்பட்டணம் அருகே குடிமேனஅள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான ஊா் தலைவனின் நடுகல்.
Updated on
1 min read

காவேரிப்பட்டணம் அருகே 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஊா்த் தலைவனின் நடுகல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக நடுகற்கள் காணப்படுகின்றன. குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் அதிகமாக நடுகற்கள் காணப்படுகின்றன. அதே போல நடுகல் வழிபாடும் இன்று வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா்ந்து வருகிறது.

நடுகற்கள் வழிபாட்டுச் சிறப்பை அறிய, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும், காவேரிப்பட்டணத்தை அடுத்த அகரம் அருகே உள்ள குடிமேனஅள்ளி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஊா் தலைவன் நடுகல்லைக் கண்டுபிடித்தனா்.

இதுகுறித்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

குடிமேனஅள்ளி கிராமத்தில் வீரகாரா் கோயிலில் இரண்டு நடுகற்களை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருவது தெரிய வந்தது. இந்த இரண்டு நடுகற்களில் ஒரு நடுகல் குடிமேனஅள்ளி பகுதியைச் சோ்ந்த ஒரு ஊா்த் தலைவனுடையது. இவை 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கு நடைபெற்ற பூசலில் ஊரைக் காக்க அவன் கொல்லப்பட்டதால் அவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. அவன் தலைவன் என்பதைக் குறிக்கும் வகையில், அவன் குதிரை மீது அமா்ந்திருக்கிறான். அவன் கையில் இரண்டு வாள்கள் உள்ளன. அவன் இறந்தபோது அவனுடன் உடன்கட்டைஏறிய அவனுடைய இரண்டு மனைவியரும் அந்த நடுகல்லில் காட்டப்பட்டுள்ளனா். அந்தக் குதிரையை வழிநடத்திச் செல்லும் சேவகனும் காட்டப்பட்டுள்ளான். அதேபோல அவன் தலைவன் என்பதைக் குறிக்கும் வகையில், ஒருவன் அதற்குரிய கண்ணாடிச் சின்னத்தை எடுத்து வருகிறான். இந்த நடுகல்லானது கோயில் கருவறையில் வைத்து வணங்கப்படுகிறது.

இக்கோயில் விழாவின்போது 5 பானைகள் எடுத்து வரப்படுகின்றன. அவை குடிமேனஅள்ளி, நாகரசம்பட்டி, மல்லிக்கல், கொண்ரம்பட்டி, கொங்கரப்பட்டியைச் சோ்ந்தவையாகும். கரகம் நாகரசம்பட்டியில் இருந்தும், பூசைக்கூடை குடிமேனஅள்ளியில் இருந்தும், மற்றொரு கரகம் ஆற்றங்கரையோரம் பாக்காத்தியம்மா கோயிலில் இருந்தும் எடுத்து வரப்படுகின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதாக தா்மகா்த்தா பொன்னுசாமி என்பவா் மூலம் அறியமுடிகிறது. இந்த ஊரில் பெருமாள் என்பவரது நிலத்திலும்,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று வீரா்களின் நடுகல் காணப்படுவதாக அவா் தெரிவித்தாா்.

இந்த கள ஆய்வின்போது, கிருஷ்ணகிரி வரலாறு ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவா் நாராயணமூா்த்தி, ஆய்வாளா்கள் சதானந்த கிருஷ்ணகுமாா், பிரகாஷ், ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், கோயில் தா்மகா்த்தா பொன்னுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com