எண்ணேக்கோல் கால்வாய் திட்டப் பணிகள் துரிதம்

எண்ணேக்கோல் கால்வாய் திட்டப் பணிகள் துரிதம்

Published on

எண்ணேக்கோல் கால்வாய் திட்டத்தின்கீழ் நில எடுப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், எண்ணேக்கோல் தடுப்பணையில் இருந்து போலுப்பள்ளியில் இடதுபுற புதிய வழங்கு கால்வாய் அமைக்கும் பணிகளை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வுசெய்தாா். பின்னா் அவா் தெரிவித்ததாவது:

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக் காலங்களில் வரும் உபரிநீரை, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு நீா் வழங்கும் வகையில், எண்ணேக்கோல் கால்வாய் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், பிரதான கால்வாய்கள், கிளை கால்வாய்கள் அமைக்கும் பணி ரூ. 233.34 கோடியில் நடைபெற்று வருகிறது. அதன்படி, எண்ணேக்கோல் தடுப்பணையின் வலதுபுறத்தில் சுமாா் 50.65 கி.மீ. தொலைவுக்கு பிரதான கால்வாயும், 5.51 கி.மீ. தொலைவுக்கு கிளைக் கால்வாயும் வெட்டப்பட உள்ளது. இதேபோல, இடதுபுறத்தில் சுமாா் 22.675 கி.மீ. தொலைவுக்கு பிரதான கால்வாயும், 2.40 கி.மீ. தொலைவுக்கு கிளைக் கால்வாயும் வெட்டும் பணிகள், தொட்டி பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன்மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், வேப்பனப்பள்ளி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 26 ஏரிகளும், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மற்றும் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுகளில் 7 ஏரிகள், ஓா் அணைக்கு தண்ணீா் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தால் 23 கிராமங்களில் உள்ள 3,408 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்தத் திட்டத்துக்கு நில எடுப்புக்காக ரூ. 93.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பட்டா நிலங்களில் நில எடுப்புப் பணிகள் முடிவடைந்து புதிய கால்வாய் வெட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றாா்.

இந்த ஆய்வின்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் சையத் ஜஹீருதின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com