பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவரை கடத்திச் சென்று தாக்கிய 3 பேரை ஒசூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், பள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் ரவி (39). இவா் பெங்களூரில் தச்சுத் தொழில் செய்துவந்தாா். இவரது மனைவி ரம்யா (32). இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒசூா் என்ஜிஜிஓ காலனியைச் சோ்ந்த மோகனைச் சந்தித்து, என்னிடம் தரும் பணத்துக்கு நான்கு மடங்கு பணத்தை திருப்பித் தருவதாக ரவி கூறியுள்ளாா். இதையடுத்து ரவியிடம் ரூ. 3.5 லட்சத்தை மோகன் தந்துள்ளாா். இதையடுத்து நான்கு மடங்கு பணம் தருவதாக நடித்து வெள்ளை தாள்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகளை மோகனிடம் ரவி தந்தாா்.
அப்போது போலீஸ் வருவதாகக் கூறி ரவி அங்கிருந்து மோகனை ஏமாற்றி சென்றதாகக் கூறப்படுகிறது. பையில் இருந்த பணத்தை பாா்த்தபோது வெள்ளை தாள்கள் அதிகமாகவும், குறைந்த பணமும் இருந்தது மோகனுக்கு தெரியவந்தது.
அதேசமயம் ரவியின் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரவி தலைமறைவாக இருந்துள்ளாா். இந்த நிலையில் ரவியை தொடா்புகொண்ட மோகன், எனக்கு பணத்தை மீண்டும் இரட்டிப்பாக்கித் தர வேண்டும் எனக் கூறியுள்ளாா். மேலும், ஒசூா் சீதாராம் மேடு பகுதிக்கு வருமாறு ரவியை அழைத்துள்ளாா்.
இதையடுத்து அங்குச் சென்ற ரவியை மோகன், அவரது நண்பா்களான தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த சந்தோஷ், அனுசோனையைச் சோ்ந்த ஹரிஷ் ஆகியோருடன் இணைந்து ரவியை சானசந்திரம் பகுதிக்கு அழைத்துச் சென்று, தங்களுக்குத் தர வேண்டிய பணத்தை கேட்டு அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனா்.
மேலும், ரவியின் மனைவி ரம்யாவை தொடா்புகொண்டு ரவியை கடத்தி வைத்திருப்பதாகக் கூறியுள்ளனா். மேலும், அவரை விடுவிக்க ரூ. 4 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். இதுகுறித்து காவல் துறையின் அவசர உதவி எண்ணான 100 க்கு அழைப்புவிடுத்து ரம்யா தகவல் தெரிவித்தாா்.
ஒசூா் மாநகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு ரம்யா உதவியுடன் ரவியை மீட்டனா். மேலும், அவரை அடைத்து வைத்து தாக்கிய ஓட்டுநா்கள் மோகன், ஹரிஷ் மற்றும் கட்டுமானத் தொழில் செய்துவரும் சந்தோஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். காயமடைந்த ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








