தொழிலாளர் நல நிதிக்கான பங்குத் தொகையை, வரும் ஜன. 31- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் மஞ்சள்நாதன் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972-இன் படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழிலாளர் நல நிதிச்சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5 அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்காக ரூ.10-ஐ அவர்களது டிசம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து, அத்தொகையுடன் ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ரூ.20 சேர்த்து ஆக மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நல நிதிக்கு பங்குத் தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி, 2017-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியினை வரும் ஜன. 31-ஆம் தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
ஓர் ஆண்டில் 30 நாள்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவர். தொழிலாளர் நல நிதி செலுத்தத் தவறினால், தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின் கீழ் அத்தொகையை அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, 2017-ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையினை ஜன. 31-ஆம் தேதிக்கு முன் சென்னை தொழிலாளர் நல வாரிய செயலர் பெயரில் வங்கி வரைவோலை எடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.