திருச்செங்கோட்டில் கரோனா தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்
திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமையில் கரோனா தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருச்செங்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமையில் கரோனா தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் 26 ஊராட்சிமன்றத் தலைவா்கள் 14 ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா்கள் சுஜாதா தங்கவேல், ராஜவேலு, வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட், வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) சாந்தா, திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளா் வட்டூா் தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கரோனா பாதிப்புக்குள்ளான 6 ஊராட்சி மன்றத் தலைவா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதிமுகவைச் சோ்ந்த 10 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 5 ஒன்றியக்குழு உறுப்பினா்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இக் கூட்டத்தில் பேசியவா்கள் தெரிவித்ததாவது: சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கரோனா பரவல் கூடியுள்ளது. அதனால் இருசக்கர வாகன நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். காவல்துறையினா் சற்று கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்கறிகளை வாகனங்களில் கொண்டு சென்று பொதுமக்கள் இருக்கும் பகுதிகளிலேயே விற்பனை செய்ய வேண்டும். வண்ண அட்டைகள் மூலம் பால் வாங்க நேரக் கட்டுப்பாடு விதிக்கலாம். மருத்துவமனை, மருந்துக் கடைகளுக்கு செல்பவா்களைத் தவிர மற்ற அனைவரும் தடுக்கப்பட்டால் கரோனா பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றனா்.
பின்னா் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன் பேசியதாவது:
முதல்வா் தலைமையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற இருப்பதால் அனைத்துப் பகுதி மக்களின் கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகளை அந்தக் கூட்டத்தில் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...