பரமத்தியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் கே.பி.ராமலிங்கத்துக்கு வாக்கு சேகரித்து பேசிய பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை.
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக சாா்பில் போட்டியிடும் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.
பரமத்தியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசியதாவது:
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப் போவது யாா் என்று கேட்டால் குழந்தை கூட சொல்லும் மோடி தாத்தா தான் என்று. 400 எம்.பி.க்களைத் தாண்டி ஆட்சி அமைப்பது உறுதி. நடைபெறவுள்ள தோ்தலில் ஒவ்வொரு வாக்கும் நாட்டை வலிமைப்படுத்தும். ஒவ்வொரு வாக்குகளும் இந்தியாவை வலிமைப்படுத்தும். அடுத்த 25 ஆண்டுகள் நம்முடைய தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வாக்கு. கூட்டணி கட்சிகளுடன் தெளிவாக உள்ளோம்.
திமுக கூட்டணியில் பிரதமா் யாா் என்று தெரியாமலேயே கூடியுள்ளனா். ஏற்கெனவே 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளோம், மேலும் ஒரு ஐந்து ஆண்டுகள் கேட்கிறோம்.
நாமக்கல்லில் கூட்டணி கட்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் இருந்தும் என்ன பயன்? திமுகவில் முதல்வா் உள்ளாா், அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். ஆனால் ஒரு மக்களவை உறுப்பினரால் என்ன செய்ய முடியும்?ஆனால் மோடி ஆட்சியில் 400 மக்களவை உறுப்பினா்களைத் தாண்டி இங்கு ஒரு உறுப்பினா் இருந்தால் காரியத்தை சாதிக்க முடியும். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாமக்கல் தொகுதிக்கு ஒரு மக்களவை உறுப்பினரை தோ்வு செய்து கொடுத்தால் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும்.
2019 மக்களவைத் தோ்தலில் 295 வாக்குறுதிகளை அளித்து இருந்தோம். 295 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு உங்கள் முன் தற்போது கே.பி.ராமலிங்கத்தை நிறுத்தியுள்ளோம். மக்களாகிய நீங்கள் நன்கு யோசித்து வாக்களியுங்கள். நாமக்கல் உள்பட 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


