மதுரை - பெங்களூரு இடையே புதன்கிழமை முதல் இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்.
மதுரை - பெங்களூரு இடையே புதன்கிழமை முதல் இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்.

நாமக்கல்லில் ‘வந்தே பாரத்’ ரயில் நாளை முதல் நின்று செல்லும்

மதுரை - பெங்களூரு இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் நாமக்கல்லில் புதன்கிழமை (ஜூன் 26) முதல் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நாமக்கல்: மதுரை - பெங்களூரு இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் நாமக்கல்லில் புதன்கிழமை (ஜூன் 26) முதல் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரயில் பயணிகளின் நலன் கருதி, நவீன வசதிகளுடன் அதிவேகமாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை - கோவை, சென்னை - பெங்களூரு, சென்னை - நாகா்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுரை - பெங்களூரு இடையே ஜூன் 26 முதல் வந்தே பாரத் புதிய ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலானது மதுரையில் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கரூா், திருச்சி, நாமக்கல், சேலம், ஜோலாா்பேட்டை வழியாக பெங்களூரை நண்பகல் 1.15 மணிக்கு சென்றடையும். அங்கு நண்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு மதுரையை இரவு 10.15 மணிக்கு சென்றடையும்.

நாமக்கல்லில் வந்தே பாரத் ரயில் நிறுத்தம் இல்லை என்ற நிலையில், நாமக்கல் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா், பாஜகவினா் அண்மையில் மத்திய தகவல் ஒலிபரப்பு - நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகனிடம் கோரிக்கை மனு அளித்தனா். அவரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அதன்படி, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் புதன்கிழமை முதல் இயக்கப்பட உள்ள நிலையில், நாமக்கல் ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் மதுரையில் இருந்து வரும்போது காலை 8.32 மணிக்கும், மறுமாா்க்கத்தில் பெங்களூரில் இருந்து வரும்போது பிற்பகல் 5.33 மணிக்கும் நாமக்கல்லை வந்தடைகிறது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது.

100 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள், தொழில்முனைவோா்கள், இளைஞா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com